சினிமாவில் தன்னுடைய 50 ஆவது ஆண்டை தொடப் போகிறார் இசைஞானி இளையராஜா. தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும் தன்னுடைய 82 ஆவது வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1500 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. இளையராஜா 76 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படம் மூலம் அறிமுகமான நிலையில் ஐந்தே ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் நம்பர் 1 இசையமைப்பாளராக ஆனார்.
அதன் பிறகு மிடாஸ் மன்னன் போல அவர் தொட்டதெல்லாம் தங்கமாக மாறின. அந்தளவுக்கு அவர் பாடல்கள் அடுத்த சில தசாப்தங்களுக்கு தமிழர்களை மயக்கியது. அதன் பின்னர் 1992 ஆம் ஆண்டு ரஹ்மானின் வருகைதான் அதன் பிறகு தமிழ் சினிமா இசையின் போக்கை மாற்றியது. ரஹ்மானின் வரவால் மணிரத்னம், ஷங்கர், கதிர் போன்ற முக்கியமான இயக்குனர்கள் அவர் பக்கம் செல்ல ஆரம்பித்தனர்.
இளையராஜா இசையமைத்த பாடல்களின் எண்ணிக்கை பார்க்கும் போது அவர் எப்படி இத்தனை ட்யூன்களை உருவாக்கி, அதற்கு பாடல்கள் வாங்கி ரெக்கார்ட் செய்திருப்பார் என்பது ஆச்சர்யமாக இருக்கும். பல இயக்குனர்கள் அவரோடு பணிபுரியும் போது அவரின் இசையமைக்கும் வேகத்தைப் பற்றி சிலாகித்து பேசியுள்ளார். சின்னத்தம்பி படத்துக்கெல்லாம் 9 ட்யூன்களை ஒரு மணி நேரத்துக்குள் போட்டுக்கொடுத்து விட்டார் என்று பி வாசு கூறியுள்ளார். அப்படி உருவாக்கிய அனைத்துப் பாடல்களுமே ஹிட் என்பது அதில் ஆச்சர்யமான விஷயம்.
இந்நிலையில் இளையராஜா ஒரு முறை பேசும்போது தான் அதிக நேரம் எடுத்துக் கொண்டு இசையமைத்தது எந்த பாடல் எனக் கூறியுள்ளார். 1985 ஆம் ஆண்டு வெளியான உதயகீதம் என்ற படத்தில் உள்ள பாடுநிலாவே தேன்கவிதை என்ற பாடலுக்குதான் அவர் தன்னை வருத்திக் கொண்டு இரண்டு மணிநேரத்துக்கும் மேல் நேரம் எடுத்துக் கொண்டு இசையமைத்தாராம்.