சினிமாவில் தன்னுடைய 50 ஆவது ஆண்டை விரைவில் தொடப் போகிறார் இசைஞானி இளையராஜா. தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும் தன்னுடைய 82 ஆவது வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1500 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. இளையராஜா 76 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படம் மூலம் அறிமுகமான நிலையில் ஐந்தே ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் நம்பர் 1 இசையமைப்பாளராக ஆனார்.
அதன் பிறகு மிடாஸ் மன்னன் போல அவர் தொட்டதெல்லாம் தங்கமாக மாறின. அந்தளவுக்கு அவர் பாடல்கள் அடுத்த சில தசாப்தங்களுக்கு தமிழர்களை மயக்கியது. அதன் பின்னர் 1992 ஆம் ஆண்டு ரஹ்மானின் வருகைதான் அதன் பிறகு தமிழ் சினிமா இசையின் போக்கை மாற்றியது. அதன் பின்னர் திறமையான இயக்குனர்கள் இளையராஜாவை தேடி செல்லவில்லை. அப்படி சென்ற பாலா போன்ற இயக்குனர்களுக்கு முத்து முத்தான பாடல்களை ராஜா கொடுத்துள்ளார்.
இளையராஜா இசையில் அதிகமான பாடல்களைப் பாடிய பெண் பாடகர்களில் ஒருவர் எஸ் ஜானகி அவர்கள்தான். இளையராஜா உச்சத்தில் இருந்தபோது அவரின் பெரும்பாலானப் பாடல்களைப் பாடிய்வர் ஜானகிதான். அப்படி ஒரு ஹிட் பாடல்தான் சகலகலா வல்லவன் படத்தில் இடம்பெற்ற ‘நிலா காயுது’ பாடல். அந்த பாடலில் பல இடங்களில் காமம் தூக்கலாக இருக்கும். அதை தனது வித்தியாசமானக் குரல் மூலமாக வேறு தளத்துக்குக் கொண்டு சென்றிருப்பார் ஜானகி.
ஒரு நேர்காணலில் இளையராஜாவின் ஒரு ரசிகை இப்பாடல் பற்றி பேசும்போது “நிலா காயுது பாடலை எப்படி சொல்லிக் கொடுத்து பாடவைத்தீர்கள்?” என்று கேட்டபோது அதற்கு பதிலளித்த இளையராஜா “அந்த பாடலை எப்படி பாட வேண்டும் என்று நான்தான் பாடிக் காட்டினேன். நான் பாடும்போதே ஜானகி அம்மா சிரித்துவிட்டார். அந்த மாதிரி ஒரு பாடலை நான் சொல்லிக் கொடுக்காமல் எப்படி ஒரு பாடகரால பாட முடியும். அதற்கான ஸ்பேஸ் நான்தான் அமைத்துக் கொடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.