நூறாண்டு கால தமிழ் சினிமாவில் தன்னிகரற்ற ஒரு ஆளுமை என்றால் கண்ணை மூடிக்கொண்டு இளையராஜாவின் பெயரை சொல்லலாம். இசையமைப்பாளராக அவர் அறிமுகமானதில் இருந்து இப்போது வரை அவர் செய்திருக்கும் சாதனைகள் உலக சினிமாவிலேயே எவரும் இதுவரை படைக்காத சாதனைகள்.
இப்போதும் தன்னுடைய 82 ஆவது வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1500 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்கள் எல்லோரையும் விட அதிக பாடல்களை தந்து தமிழ் ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார்.
இளையராஜாவின் படைப்புத்திறன் உச்சத்தில் இருந்த காலம் என்றால் அது 70 களில் இறுதியில் இருந்து 90 களின் தொடக்கத்தில் ரஹ்மானின் அறிமுகம் வரை என்று சொல்லலாம். அதன் பின்னரும் அவர் தீவிரமாக இயங்கினாலும் அவரின் புகழ் உச்சத்தில் இருந்த காலம் என்றால் அது 80கள்தான். அப்போதெல்லாம் ஒரு ஆண்டுக்கு அதிகபட்சமாக 50 படங்கள் வரை இசையமைத்துள்ளார். இதனால் அவருக்கு ஒருநாள் கூட ஓய்வு கிடைக்காத சூழலே இருந்துள்ளது.
ஒரு பானை சோற்றுக்கு ஒருசோறு பதம் என்பது போல இளையராஜா தன்னுடைய முதல் படமான அன்னக்கிளி படம் மூலமாகவே தான் யார் என்பதை இந்த சினிமா உலகுக்குக் காட்டினார். அன்னக்கிளி வந்தபோதே இளையராஜா பெரும் கவனம் பெற்றார். அடுத்தடுத்து அவரை படத்துக்கு இசையமைக்க வைக்க இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அவரை அணுக ஆரம்பித்தனர்.
அப்படி சென்ற இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான காரைக்குடி நாராயணன் இளையராஜாவோடு நடந்த சுவாரஸ்யமான சம்பவம் பற்றி பகிர்ந்துள்ளார். அதில் “நான் இளையராஜாவை சென்று சந்தித்து என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அப்போது அவர் உங்களைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும். அதனால் உங்கள் அறிமுகம் தேவையில்லை என்றார். அதுவே எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
நான் படம் எடுக்கப்போவதை சொல்லி சம்பள விஷயத்தைப் பேச ஆரம்பித்தேன். நான் 5000 ரூபாய் சம்பளம் சொன்னேன். அவர்கள் 10000 ரூபாய் கேட்டார்கள். நான் இறுதிய்ல் 7500 ரூபாயில் வந்து நின்றேன். அதைக்கேட்ட இளையராஜா 7500 ரூபாய் வேண்டாம். ஏழரை என்று சொல்வார்களே அதுபோல உள்ளது அந்த தொகை. கூட 500 ரூபாய் போட்டு 8000 ரூபாயாகக் கொடுங்கள் என்றார். நானும் கொடுத்தேன்” எனக் கூறியுள்ளார். அப்படி இளையராஜா இசையில் உருவான திரைப்படம் அச்சாணி. அந்த படத்தில்தான் இன்று வரை பிரபலமாக உள்ள ‘மாதா உன் கோயிலில் மணி தீபம் ஏற்றினேன்” பாடல் இடம்பெற்றது.