CINEMA
நான் இயக்குனர் ஆகணும் ஆசைப்பட்டது, அவருதான்… பாரதிராஜா இல்லை –ஓப்பனாக சொன்ன மணிவண்ணன்!
தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும் கலக்கியவர் மணிவண்ணன். இன்றைய இளைஞர்கள் பலருக்கு அவர் ஒரு வெற்றிப்பட இயக்குனர் என்பது தெரியாத தகவலாக இருக்கும். சத்யராஜ், மோகன் மற்றும் விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களோடு இணைந்து பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர்.
கோயம்புத்தூரைப் பூர்விகமாக கொண்ட மணிவண்ணன், நடிகர் சத்யராஜின் கல்லூரித் தோழர். பாரதிராஜாவின் 16 வயதினிலே படத்தை பார்த்த மணிவண்ணன் அந்த படத்தைப் பாராட்டி 50 பக்கத்து மேல் ஒரு விமர்சன மதிப்புரையை அவருக்கு எழுதி அனுப்பியுள்ளார். அதை படித்து பார்த்து வியந்த பாரதிராஜா, அவரை சென்னைக்கு வரவழைத்து தன்னுடைய உதவி இயக்குனராக சேர்த்துக்கொண்டார்.
மணிவண்ணன் சில படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய நிலையில் தான் இயக்கிய நிழல்கள் படத்துக்கு மணிவண்ணனை கதை வசனம் எழுத வைத்தார் பாரதிராஜா. அந்த படம் தோல்வி படமாக அமையவே மீண்டும் அவரை அலைகள் ஓய்வதில்லை படத்துக்கு வசனம் எழுதவைத்து ஹிட் கொடுத்தார். அதுமட்டுமில்லாமல் மணிவண்ணனை நடிகராக அறிமுகப்படுத்தியதும் பாரதிராஜாதான். தன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கொடி பறக்குது திரைப்படத்தில் வில்லனாக அறிமுகப்படுத்தினார்.
அப்போது மணிவண்னனின் திறமையையும் உழைப்பையும் கவனித்த இளையராஜா அவரை இயக்குனராக்கும் பொருட்டு, அவரை கோபுரங்கள் சாய்வதில்லை என்ற படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றுத்தந்துள்ளார். ஆனால் அவர் பாரதிராஜாவின் உதவி இயக்குனர் என்பதால் அந்த வாய்ப்புக் கிடைத்ததாக பலரும் நினைத்துள்ளனர்.
ஆனால் அதுபற்றி மணிவண்ணனே ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். அதில் “பாரதிராஜா எல்லாம் நான் இயக்குனர் ஆகவேண்டும் என்று நினைக்கக் கூட இல்லை. என்னை இயக்குனர் ஆக்கியதே இளையராஜாதான். அவர்தான் தயாரிப்பாளர்களிடம் என்னைப் பற்றி சொல்லி எனக்கு அந்த வாய்ப்பைப் பெற்றுத்தந்தார். பாரதிராஜா எல்லாம் என்னை கேமராவையேப் பார்க்கவிடமாட்டார்.
பாக்யராஜிடம் பேசினால் கூட ‘அவன் கூட ஒனக்கு என்னடா பேச்சு’ எனத் திட்டுவார்” என பல தடாலடியான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். இந்த நேர்காணலை அவர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.