சாதனைகள் செய்வதற்கு வயது என்றுமே தடையில்லை என்பதற்கு நம் கண்முன் இருக்கும் உதாரணம் இளையராஜா அவர்கள். 27 வயதில் தனக்கு இசைக் குறிப்புகள் எழுதக் கூட தெரியாத நிலையில் இருந்து இன்று இசையை எழுதும் ஒரு சில இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார். தன்னுடைய 82 ஆவது வயதில் இப்போது முதல் சிம்ஃபொனியை அரங்கேற்றியுள்ளார்.
இன்றைக்கு உலகில் இருக்கும் இசையமைப்பாளர்களில் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவராக இருக்கிறார் இளையராஜா. இப்போதும் தன்னுடைய 82 ஆவது வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1200 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது தவிர இசைக் கச்சேரிகளை உலகம் முழுவதும் நடத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. அவரின் வருகைக்குப் பிறகே தமிழ் சினிமாவில் பின்னணி இசையை இயக்குனர்கள் உணர ஆரம்பித்தார்கள் என்றால் அது மிகையாகாது.
இளையராஜாவிடம் பாராட்டு பெறுவது என்பது சாதாரணமான ஒன்றல்ல. அவர் இதுவரை வெகு சிலரையேப் பாராட்டியுள்ளார். தன்னோடு பணிபுரிந்த இயக்குனர்களைக் கூட அவர் பெரிதாகப் பாராட்டியதில்லை. அப்படி என்றால் அவருக்குப் பாராட்டும் மனம் இல்லை என்று அர்த்தம் இல்லை. மிக உயர்ந்த விஷயங்களை மட்டுமே பாராட்டுவது அவரது இயல்பு.
அப்படிப்பட்ட இளையராஜா ஒரு நடிகரின் நடிப்பை வியந்து பாராட்டி ‘அவரை நேரில் பார்த்தால் சாஷ்டாங்கமாக அவர் காலில் விழுந்துவிடுவேன்’ என்று சொல்லி இருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?. இசை மேதை மொஸார்ட்டின் வாழ்க்கை வரலாறு ‘அமேதியஸ்’ என்ற பெயரில் படமாக எடுக்கப்பட்டது. அதில் வில்லனாக நடித்த முர்ரே ஆப்ரஹாம் என்ற நடிகரைப் பற்றிதான் அப்படி பேசியுள்ளார் இளையராஜா. அந்த படத்தில் அவரின் வியந்து பாராட்டியுள்ள இளையராஜா அந்த படத்தை 27 முறை பார்த்துள்ளதாகவும், ஒவ்வொரு முறையும் அந்த படம் தன்னை சுவாரஸ்யமாகப் பார்க்கவைத்து ஒவ்வொரு புதிய விஷயத்தைக் கற்றுத் தந்ததாகவும் கூறியுள்ளார்.