அந்த பாட்டு மாதிரி போடுங்க, இந்த பாட்டு மாதிரி போடுங்கன்னு சொன்னா எனக்கு ஏன் கோபம் வருது… இளையராஜா அளித்த விளக்கம்!

By vinoth on சித்திரை 4, 2025

Spread the love

சாதனைகள் செய்வதற்கு வயது என்றுமே தடையில்லை என்பதற்கு நம் கண்முன் இருக்கும் உதாரணம் இளையராஜா அவர்கள். 27 வயதில் தனக்கு இசைக் குறிப்புகள் எழுதக் கூட தெரியாத நிலையில் இருந்து இன்று இசையை எழுதும் ஒரு சில இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார்.  தன்னுடைய 82 ஆவது வயதில் இப்போது முதல் சிம்ஃபொனியை அரங்கேற்றியுள்ளார்.

இன்றைக்கு உலகில் இருக்கும் இசையமைப்பாளர்களில் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவராக இருக்கிறார் இளையராஜா. இப்போதும் தன்னுடைய 82 ஆவது  வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1200 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது தவிர இசைக் கச்சேரிகளை உலகம் முழுவதும் நடத்தியுள்ளார்.

   

தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. அவரின் வருகைக்குப் பிறகே தமிழ் சினிமாவில் பின்னணி இசையை இயக்குனர்கள் உணர ஆரம்பித்தார்கள் என்றால் அது மிகையாகாது.

   

 

இளையராஜாவின் இசைதான் இனிமையாக இருக்கும், ஆனால் அவர் இனிமையானவர் இல்லை என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். அவரிடம் ஒரு பாடல் வேண்டும் என சொல்லி, அதற்கு எதாவது ஒரு பாடலை உதாரணமாக சொன்னால், அது அவர் பாடலாக இருந்தால் கூட கோபப்பட்டு திட்டிவிடுவார் என பல இயக்குனர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் ஏன் அப்படி இயக்குனர்கள் கேட்கக் கூடாது என்பதற்கு இளையராஜா விளக்கம் அளித்துள்ளார். அதில் “இப்படி ஒரு இயக்குனர் சொன்னால் அவர் உதாரணமாக சொல்லும் பாடலை விட சிறந்த பாடல் வருவதை தடுத்து விடுகிறார். இதன் மூலம் அவரே கட்டுப்பாடுகளை விதித்து விடுகிறார். அப்படி இல்லாமல் திறந்த மனதுடன் இருந்தால், அந்த பழைய பாடலை விட மிகச்சிறப்பான புதிய பாடலை உருவாக்கலாம்” எனக் கூறியுள்ளார்.