இன்றைக்கு உலகில் இருக்கும் இசையமைப்பாளர்களில் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவராக இருக்கிறார் இளையராஜா. இப்போதும் தன்னுடைய 82 ஆவது வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1200 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது தவிர இசைக் கச்சேரிகளை உலகம் முழுவதும் நடத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. அவரின் வருகைக்குப் பிறகே தமிழ் சினிமாவில் பின்னணி இசையை இயக்குனர்கள் உணர ஆரம்பித்தார்கள் என்றால் அது மிகையாகாது.
இளையராஜா மிகவும் மென்மையான மற்றும் ஆன்மீக ரீதியான இசையைதான் அதிகமாக விரும்புவார். ஆனால் அவர் இசையமைத்ததில் பெரும்பாலானப் படங்கள் எல்லாம் கமர்ஷியல் படங்கள்தான். ஆனால் அதிலும் தன்னுடைய முத்திரையைப் பதித்தவர்.
தமிழ்நாட்டின் ஒரு கோடியில் இருக்கும் பண்ணைபுரத்தில் பிறந்த இளையராஜாவுக்கு ஆரம்ப நாட்களில் இசை குருவாக இருந்தவர் அவரது அண்ணன் பாவலர் வரதராஜன் அவர்கள்தான். கம்யூனிஸ்ட் கட்சி கூட்டங்களில் பாடல்கள் பாடி பிரச்சாரம் மேற்கொண்டு வந்த அவர் தம்பிகளையும் பாடல்கள் பாடவைத்து இசைக் கருவிகள் கற்றுக்கொள்ள வைத்து ஆர்வத்தைத் தூண்டியுளார். ஆனால் இளையராஜா இசையமைப்பாளர் ஆன சில வருடங்களிலேயே அவர் காலமாகிவிட்டார்.

இந்நிலையில் பாவலர் வரதராஜன் குறித்து சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் சிலாகித்துப் பேசியுள்ளார் இசைஞானி இளையராஜா. அதில் “என் அண்ணன் பாவலர் வரதராஜனின் சில ட்யூன்களை நான் பயன்படுத்தியுள்ளேன். நான் முதல் முதலாக ரெக்கார்ட் செய்த ஒரு பாடலை அவரிடம் கொண்டு போய் காட்டியபோது அவர் மிகவும் பெருமிதப்பட்டார். அவரை நான் மிகவும் மிஸ் செய்கிறேன். ஏனென்றால் அவர் எல்லாம் என் எஸ் கே அளவுக்கு மிகப்பெரிய ரைட்டர்.” எனக் கூறியுள்ளார்.
