2026 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனித்துப் போட்டியிடும் நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று தனது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். புதுச்சேரியின் வளர்ச்சியை மையமாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், வேலைவாய்ப்பில் மண்ணின் மைந்தர்களுக்கு 75% முன்னுரிமை வழங்கப்படும் என்கிற அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. மேலும், பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ₹4,000 மற்றும் டிப்ளமோ பயின்றவர்களுக்கு மாதம் ₹2,000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும், கல்வி மற்றும் அரசுப் பணிகளுக்கான தேர்வுகள் எவ்வித தாமதமும் இன்றி முறையாக நடத்தப்படும். மகளிர் மகப்பேறு உதவித்தொகை 25000 ரூபாய் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
சமூக நீதியை அடித்தளமாகக் கொண்ட இந்தத் தேர்தல் அறிக்கையில், பெண்களுக்கான சிறப்புத் திட்டங்கள் மற்றும் போதைப்பொருள் இல்லாத புதுச்சேரியை உருவாக்குவதற்கான “பாதுகாப்பு மண்டலங்கள்” அமைப்பது போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மாநில அந்தஸ்து பெறுவதற்கான சட்டப் போராட்டங்களை முன்னெடுப்போம் எனத் தெரிவித்துள்ள விஜய், 500 புதிய படைப்பாற்றல் பள்ளிகள் மற்றும் சிறு தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் திட்டங்களையும் அறிவித்துள்ளார். புதுச்சேரியின் 30 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் தவெக, பாரம்பரியக் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு புதிய அரசியல் அத்தியாயத்தைப் படைக்கும் முனைப்பில் களமிறங்கியுள்ளது.
