ஸ்கூல் பசங்க பைக் ஓட்டி.. சென்றால் பறிமுதல் செய்ய.. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!

By Swetha on வைகாசி 29, 2026

Spread the love

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டிப் பள்ளிக்கு வருவதைத் தடுக்கும் பொருட்டு, தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை கடுமையான புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஓட்டுநர் உரிமம் இல்லாத பள்ளி மாணவர்கள் வாகனங்களை இயக்குவதால் ஏற்படும் விபத்துகளையும், பாதுகாப்பு விதிமீறல்களையும் தவிர்ப்பதற்காக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகத்தின் அறிவுறுத்தலின் பேரில், பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ். கண்ணப்பன் அவர்கள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் இதுதொடர்பான முக்கியச் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.

இந்த புதிய விதியின்படி, பள்ளி மாணவர்கள் தடையையும் மீறி இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்தால், அந்த வாகனங்கள் உடனடியாகப் பள்ளி நிர்வாகத்தால் பறிமுதல் செய்யப்படும். அதன்பின்னர், சம்பந்தப்பட்ட மாணவரின் பெற்றோரைப் பள்ளிக்கு நேரில் வரவழைத்து, அவர்களுக்குச் சாலை விதிகள் குறித்துத் தகுந்த அறிவுரைகளும் எச்சரிக்கையும் வழங்கப்படும். அதன் பின்னரே பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் என்று கடுமையான நடைமுறை வகுக்கப்பட்டுள்ளது.

   

மேலும், மாணவர்களிடையே சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த அனைத்துப் பள்ளிகளிலும் ‘சாலைப் பாதுகாப்பு மன்றம்’ கட்டாயமாகத் தொடங்கப்பட வேண்டும் என்றும், அதற்கு உடற்கல்வி ஆசிரியர்கள் தலைவராக இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகளின் தினசரி காலை வழிபாட்டுக் கூட்டத்தில் சாலைப் பாதுகாப்பு குறித்த கருத்துகளைப் பகிர்வதோடு, என்சிசி, என்எஸ்எஸ் போன்ற மாணவர் அமைப்புகள் மற்றும் போக்குவரத்து காவல் துறையினரைக் கொண்டு விழிப்புணர்வு பேரணிகள், நாடகங்கள் மற்றும் சிறப்புப் பயிற்சிகளை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.