தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம், சென்சார் சிக்கல்கள் மற்றும் அரசியல் காரணங்களால் திரையரங்குகளில் வெளியாக தாமதமாகி வந்த நிலையில், நேற்று திடீரென இணையதளத்தில் சட்டவிரோதமாகக் கசிந்தது படக்குழுவினருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலில் சில நிமிடக் காட்சிகள் மட்டுமே வெளியான நிலையில், அடுத்த சில மணி நேரங்களிலேயே முழுத் திரைப்படமும் இணையத்தில் பரவியது. அரசியல் அழுத்தங்களால் முடக்கப்பட்டதாகக் கூறப்படும் இப்படம், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், இந்த கசிவு பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
இந்த சட்டவிரோதச் செயலைக் கண்டித்துத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் (KVN Productions) அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மர்ம நபர்களால் கசியவிடப்பட்ட இந்தப் படத்தை யாராவது பதிவிறக்கம் செய்தாலோ அல்லது மற்றவர்களுக்குப் பகிர்ந்தாலோ அவர்கள் மீது கடுமையான கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு டிஜிட்டல் செயல்பாடும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், குற்றவாளிகளைக் கண்டறிய ஏற்கனவே விசாரணைகள் தொடங்கப்பட்டு காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் மற்றும் டெலிகிராம் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் இந்தப் படத்தைப் பகிர்பவர்களைக் கண்டறிவது எளிது என்பதால், ரசிகர்கள் யாரும் இந்தப் படத்தை செல்போனில் சேமித்து வைக்கவோ அல்லது பகிரவோ வேண்டாம் எனத் தயாரிப்பு நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. விதிவிலக்கு ஏதுமின்றி, இந்தப் படத்தின் கசிவில் தொடர்புடையவர்கள் மற்றும் அதைப் பரப்புபவர்கள் மீது சிவில் மற்றும் குற்றவியல் ரீதியான கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தயாரிப்புத் தரப்பு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
