திட்டமிட்டு முடக்கப்படுகிறதா ‘ஜனநாயகம்’?… 500 கோடி பட்ஜெட்… தியேட்டருக்கு வரும் முன்பே செல்போனுக்கு வந்தது எப்படி?… டிஜிபியிடம் அவசர புகார்….!!

By Muthu Mani on சித்திரை 10, 2026

Spread the love

விஜய் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியானதால் அதிர்ச்சியடைந்துள்ள தயாரிப்பாளர்கள் சங்கம், இது குறித்து தமிழக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது. அதில், சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்ட இப்படம், சென்சார் சிக்கல்களால் திரையிடப்படாமல் தள்ளிப்போய்க் கொண்டிருந்த சூழலில், நேற்று படத்தின் 5 நிமிட சண்டைக் காட்சிகள் கசிந்தன. அதனைத் தொடர்ந்து இன்று முழுப் படமும் உயர்தர (HD) பதிப்பில் இணையத்தில் வெளியான செய்தி, திரையுலகினரிடையே பெரும் பேரிடியாக இறங்கியுள்ளது.

இந்த சட்டவிரோத செயலால் படத்தின் தயாரிப்பாளர்கள், வெளிநாட்டு விநியோகஸ்தர்கள் மற்றும் ஓடிடி உரிமம் பெற்றவர்கள் என அனைவரும் பல நூறு கோடி ரூபாய் இழப்பைச் சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக புகார் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் கடைசிப் படம் என்பதால் ரசிகர்கள் இதை எப்படியாவது பார்க்க நினைப்பார்கள், ஆனால் இது முதலீடு செய்தவர்களுக்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் என தயாரிப்பாளர் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. மேலும், பான் இந்தியா முறையில் வெளியிடத் திட்டமிட்டிருந்த நிலையில், இச்செயல் திரையுலகிற்கு மட்டுமல்லாமல் அரசுக்கும் பெரும் வரி இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

   

திரைப்படத் துறையைப் பொறுத்தவரை பைரசி என்பது சுனாமி மற்றும் கொரோனா போன்ற ஒரு பெரும் பேரிடர் என முன்னாள் தலைவர் கே.ஆர். தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். டிஜிட்டல் தளங்களில் இத்திரைப்படம் மேலும் பரவாமல் தடுக்கவும், திருட்டுத்தனமாக படத்தை வெளியிட்ட நபர்களைக் கண்டறிந்து உரிய தண்டனை வழங்கவும் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தப் புகாரானது தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பில் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.

   

சமீபத்திய அரசியல் மாற்றங்கள் மற்றும் 2026 தேர்தல் அறிவிப்புகளுக்கு இடையே இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதைய இந்த பைரசி விவகாரம் படக்குழுவினருக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. விஜய்யின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாகப் பார்க்கப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு நேர்ந்துள்ள இந்தச் சிக்கல், ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக இணையதளக் குற்றப்பிரிவு போலீசார் விரைந்து விசாரணை நடத்த வேண்டும் என்பதே தயாரிப்பாளர்களின் கோரிக்கையாக உள்ளது.