விமானியாக விரும்புபவர்கள் கடக்க வேண்டிய 5 முக்கிய படிநிலைகள் உள்ளது. முதலில் +2 வகுப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒருவேளை வேறு பாடப்பிரிவு எடுத்தவர்கள் திறந்தநிலை பள்ளிகள் மூலம் இப்பாடங்களை முடித்து தகுதி பெறலாம். இதற்கு ஏரோனாடிக்கல் எஞ்சினியரிங் படிக்க வேண்டிய அவசியமில்லை; நேரடியாகவே விமானப் பயிற்சிப் பள்ளிகளில் சேரலாம்.
இரண்டாவதாக, உடல் தகுதி மிக முக்கியம். DGCA அங்கீகாரம் பெற்ற மருத்துவர்களிடம் கண் பார்வை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகளைச் செய்து ‘Class 1’ மற்றும் ‘Class 2’ சான்றிதழ்களைப் பெற வேண்டும். இதன்பின் தியரி தேர்வுகளில் (வானிலையியல், விமான வழிப்பாதை உள்ளிட்ட 5 பாடங்கள்) தேர்ச்சி பெற்று, பயிற்சிப் பள்ளிகளில் 200 மணி நேரம் விமானத்தை இயக்கி அனுபவம் பெற வேண்டும். அப்போதுதான் ‘வணிக ரீதியிலான ஓட்டுநர் உரிமம்’ (CPL) கிடைக்கும்.
பயிற்சிக்கான செலவு இந்தியாவில் சராசரியாக 40 முதல் 80 லட்சம் ரூபாய் வரை ஆகிறது. குறிப்பிட்ட வகை விமானங்களை இயக்க ‘டைப் ரேட்டிங்’ (Type Rating) பயிற்சிக்குத் தனியாக 11 முதல் 21 லட்சம் ரூபாய் வரை செலவாகும். வசதியுள்ளவர்கள் முன்னணி விமான நிறுவனங்கள் நடத்தும் ‘கேடட் பைலட் திட்டம்’ (Cadet Pilot Program) மூலம் 1 முதல் 2 கோடி ரூபாய் செலவில் நேரடிப் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பைப் பெற முடியும். வங்கிக் கடன் மற்றும் அரசு உதவித்தொகை மூலமும் இக்கனவை நனவாக்கலாம்.
வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்கள் மூலம் ஜூனியர் துணை விமானியாகப் பணியில் சேரலாம். இந்தியாவில் தொடக்க சம்பளம் 1 முதல் 2 லட்ச ரூபாய் வரை கிடைக்கும். அனுபவம் பெற்று தலைமை விமானியாகும்போது 3 லட்சத்திற்கு மேலும், வெளிநாடுகளில் 8 முதல் 10 லட்ச ரூபாய் வரையிலும் சம்பாதிக்க வாய்ப்புள்ளது. பயிற்சிப் பள்ளிகளைத் தேர்ந்தெடுக்கும்போது DGCA அங்கீகாரம் பெற்றுள்ளதா என்பதை உறுதிப்படுத்துவது அவசியம்.
