ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டாலும், அடுத்த 60 நாட்களுக்கு எண்ணெய் தட்டுப்பாடு?… உலக நாடுகளை அச்சுறுத்தும் அந்த ‘ஒற்றை’ வழித்தடம்…!!!

By Rajeshwari on சித்திரை 6, 2026

Spread the love

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டால், அது உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஒருவேளை இந்த வழித்தடம் நாளைக்கே மீண்டும் திறக்கப்பட்டாலும், எண்ணெய் விநியோகம் சீராக குறைந்தது 50 முதல் 60 நாட்கள் வரை ஆகும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதற்கு முக்கியக் காரணம் ‘சப்ளை செயின்’ எனப்படும் விநியோகச் சங்கிலியில் ஏற்படும் நீண்ட காலத் தேக்கமாகும்.

இதனால் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் காலத்தில், கச்சா எண்ணெய் ஏற்றி வரும் பிரம்மாண்டக் கப்பல்கள் கடலிலேயே நடுக்கடலில் நிறுத்தப்பட வேண்டியிருக்கும். மீண்டும் போக்குவரத்து தொடங்கும் போது, இந்தத் தேக்கங்களைச் சரிசெய்து, கப்பல்கள் தங்களின் இலக்கைச் சென்றடைந்து, அங்கிருந்து சுத்திகரிப்பு நிலையங்களுக்கு எண்ணெய் மாற்றப்பட்டு சந்தைக்கு வர நீண்ட கால அவகாசம் தேவைப்படுகிறது.

   

மேலும், உலக நாடுகளின் கச்சா எண்ணெய் கையிருப்பு இந்த இடைப்பட்ட காலத்தில் பெருமளவு குறைந்திருக்கும். அந்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, விலையை நிலைப்படுத்துவது என்பது ஒரே நாளில் நடந்துவிடாது. எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் நாடுகள் தங்களின் அவசர கால சேமிப்பை மீண்டும் நிரப்ப முன்னுரிமை அளிக்கும் என்பதால், சில்லறை விற்பனைக்கு எண்ணெய் வருவது தாமதமாகும்.

   

இதனுடன் காப்பீட்டுச் செலவுகள் அதிகரிப்பு மற்றும் கப்பல் போக்குவரத்துப் பாதையில் நிலவும் பாதுகாப்பு அபாயங்கள் போன்ற காரணிகளும் இணைவதால், உலகப் பொருளாதாரம் மற்றும் எரிசக்தி சந்தை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப இரண்டு மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியது அவசியமாகிறது.