“இந்தியாவுக்கு வந்த பேராபத்து.. தினமும் ரூ.750 கோடி நஷ்டம்.. புடின் மட்டும் கைவிட்டிருந்தா இந்தியா காலி.. உலக நாடுகளை அதிரவைத்த மாஸ் மூவ்”…!!

By Muthu Mani on வைகாசி 19, 2026

Spread the love

மத்திய அரசு கடந்த வாரம் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தியதைத் தொடர்ந்து, இன்று மீண்டும் 90 பைசா வரை உயர்த்தியுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் எரிபொருள் விலை இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டு இருப்பதால் மக்கள் பெரும் நெருக்கடியில் உள்ளனர். உலக அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காரணமாக, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் தினசரி நஷ்டம் 1,000 கோடியாக இருந்தது. தற்போதைய அடுத்தடுத்த விலை உயர்வுகள் மூலம் இந்த நஷ்டத்தின் அளவு ஓரளவு குறைந்து வந்தாலும், உண்மையான உற்பத்திச் செலவைவிட தற்போதைய விற்பனை விலை குறைவாகவே உள்ளது.

உலகளவில் ஏற்பட்டுள்ள இந்த எரிபொருள் விலை உயர்வு நெருக்கடியிலிருந்து இந்தியாவைத் தாங்கிப் பிடிக்கும் ஆபத்பாந்தவனாக ரஷ்யா உருவெடுத்துள்ளது. உலக அரசியல் பதற்றங்களுக்கு மத்தியிலும், மே மாதத்தில் மட்டும் இந்தியா ரஷ்யாவிலிருந்து சுமார் 19 லட்சம் பேரல் எண்ணெய் இறக்குமதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடைக்கான சிறப்பு விலக்கு நீட்டிக்கப்படாத சூழலிலும், இந்தியா தனது நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வணிக நலன்களுக்கு முன்னுரிமை கொடுத்து, ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்யப்படும் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

   

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலையைத் தாண்டி, கப்பல் போக்குவரத்துச் செலவும் பெருமளவு உயர்ந்துள்ளது. மேற்கு ஆசியாவிலிருந்து எல்பிஜி கொண்டு வரும் செலவு ஒரு டன்னுக்கு 94 டாலரிலிருந்து 207 டாலராக அதிகரித்துள்ளது இந்திய எண்ணெய் நிறுவனங்களின் நிதிச் சுமையைக் கூட்டியுள்ளது. இந்த நிதிச் சுமையைக் குறைக்க இந்தியா அமெரிக்கா, வெனிசுவேலா, ஓமன், பிரேசில் உள்ளிட்ட பல நாடுகளிலிருந்தும் பலதரப்பட்ட உத்திகள் மூலம் எண்ணெய் வாங்கி வந்தாலும், ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள சிக்கல்களால் ரஷ்ய எண்ணெயின் முக்கியத்துவம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

   

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் எரிபொருள் விலை 20 சதவீதம் வரை உயர்ந்து கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் ரஷ்ய எண்ணெயின் உதவியால் விலை உயர்வு ஓரளவுக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் கிடைக்காமல் இருந்திருந்தால், மத்திய அரசு தற்போது பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய்க்கும் அதிகமாக உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கும். அமெரிக்கக் கருவூலச் செயலாளர் ஸ்டார் பெசென்ட் உலக நாடுகள் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க அடுத்த 30 நாட்களுக்கு தற்காலிக விலக்கு அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.