கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடுங்கல்லூர் பகுதியில், சந்தேகத்திற்கு இடமான வகையில் அப்பார்ட்மெண்ட் ஒன்றில் வசித்து வந்த தம்பதியினரின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கிச்சனில் இருந்த பிரிட்ஜிற்குள் ஒரு பெட்டியில், சுமார் 3 மாத வளர்ச்சி கொண்ட சிசுவின் கரு பத்திரமாக வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக அந்தத் தம்பதியினரைத் தனித்தனியாகப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், தனக்கு ஏற்பட்ட கருச்சிதைவின் காரணமாக வெளியே வந்த சிசுவை வீச மனமில்லாமல், அதன் மீதான பிணைப்பால் பிரிட்ஜில் வைத்துப் பாதுகாத்ததாக அந்தப் பெண் உருக்கமான வாக்குமூலம் அளித்துள்ளார். இருப்பினும், இது இயற்கையான கருச்சிதைவா அல்லது சட்டவிரோதமாகக் கலைக்கப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். அந்தப் பெண் இதற்கு முன்பு மருத்துவ சிகிச்சை பெற்றாரா அல்லது தானாகவே மாத்திரைகள் உட்கொண்டாரா என்பது குறித்தும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது கண்டெடுக்கப்பட்ட சிசுவின் கரு மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்த பிறகே சிசுவின் இறப்பிற்கான உண்மையான காரணம் தெரியவரும். கருவை இழந்த அதிர்ச்சியிலோ அல்லது சமூகத்தின் மீதான பயத்திலோ அந்தப் பெண் இத்தகைய விசித்திரமான முடிவை எடுத்திருக்கலாம் என்று கருதப்பட்டாலும், இது சட்டப்படி குற்றம் என்பதால் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம், கருக்கலைப்பு குறித்த விழிப்புணர்வும், பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தேவையான மனநல ஆலோசனைகளும் சமூகத்தில் எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்துகிறது.
