காரைக்காலை அடுத்த வரிச்சிக்குடி க்ரீன் கார்டன் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மனைவி குமாரி. இவர்களது மகள் ஹேமா (28). இவருக்கும், கும்பகோணம் அம்மாபேட்டையை சேர்ந்த செல்வமுத்துக்குமரன் (31) என்பவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த மே மாதம் 23-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. செல்வ முத்துக்குமரன் பெங்களூரில் உள்ள ஐடி கம்பெனியில் இன்ஜினியராக வேலை செய்து வருகிறார். எனவே திருமணத்திற்குப் பிறகு ஹேமா கணவருடன் பெங்களூரில் வசித்து வந்தார்.
இந்நிலையில் ஹேமா மீது செல்வமுத்துக் குமரன் சந்தேகப்பட்டு , அவர் வேலைக்குச் செல்லும் போது வீட்டுக்குள் வைத்து பூட்டிச் சென்றுள்ளார். மேலும் அவரது செல்போனை வாங்கி உடைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து தனது தாயிடம் குமாரி சொல்லி அழுதுள்ளார். இது குறித்து தனது மாமியாரிடமும் குமாரி கூறியுள்ளார். அவர் பெங்களூர் சென்று கணவன், மனைவியை சமாதானம் செய்து ஹேமாவை அழைத்து வந்து ஆடி மாதத்திற்காக அவரது பெற்றோர் வீட்டில் விட்டுள்ளார்.
கணவரின் கொடுமையால் மன வருத்தத்தில் இருந்த ஹேமா இரவு வீட்டில் அனைவரும் தூங்கிய பிறகு மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோட்டுச்சேரி போலீசில் குமாரியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அதன் பெயரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக காரைக்கால் துணை தாசில்தார் விசாரணை நடத்தி வருகிறார். கணவனின் சந்தேகத்தால் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
