கோண்டா மாவட்டம் கரனைல்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஹாத்தி கிராமத்தில், கோழிக்கறி சமைப்பது தொடர்பாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியுள்ளது. இந்த மோதலின் போது, அவர்களின் 6 வயது மகளான மஹக்கின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது. உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர் சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்துப் பேசிய துணைக் காவல் கண்காணிப்பாளர் நிதேஷ் சிங், சிறுமியின் உடலில் தெளிவான காயங்கள் ஏதும் காணப்படவில்லை என்றும், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மரணத்திற்கான சரியான காரணம் தெரியவரும் என்றும் தெரிவித்தார். அந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
https://twitter.com/zingabad/status/2103404251565396122/video/1
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், சிறுமியின் தந்தையைக் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத் தகராறில் 6 வயது சிறுமி உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
