“மனைவியை கொன்றுவிட்டு ‘ருக்கையாவைப் பார்க்கணும்’ என புலம்பல்… தந்தையைக் காட்டி கொடுத்த குழந்தை… மர்மம் விலகாத பின்னணி..!!

By Devi Ramu on ஆவணி 7, 2026

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் இரத்லாம் பகுதியில் உள்ள சுனாரோன் கி பாவடி பகுதியில், அஸ்கர் அலி (35) என்ற நபர் தனது மனைவி ருக்கையாவை (33) கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இச்சம்பவம் நடந்தபோது அவர்களின் 7 வயது மகளும், 2 வயது மகனும் வீட்டிற்குள்ளேயே இருந்துள்ளனர். தந்தை தாயைத் தாக்குவதைக் கண்டு பயந்த 7 வயது சிறுமி, உடனடியாக வெளியே ஓடிவந்து உறவினர்களிடமும் அக்கம் பக்கத்தினரிடமும் கூறி அலறியுள்ளார். இதைக் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் உடனடியாக மானக் சவுக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்து, சம்பவ இடத்திலேயே குற்றவாளியைப் பிடிக்க உதவியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட அஸ்கர் அலி, காவல் விசாரணையின் போது கொலைக்கான காரணத்தைக் கூறாமல், “என்னை ருக்கையாவிடம் அழைத்துச் செல்லுங்கள், அவரைப் பார்க்க வேண்டும்” என்று மட்டுமே தொடர்ந்து புலம்பி வருகிறார். கடந்த சில மாதங்களாக அவர் மனநலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்ததாக அக்கம் பக்கத்தினர் கூறும் நிலையில், காவல்துறையினர் கொலைக்கான உண்மையான காரணத்தைக் கண்டறியத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.