ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணிக் கட்சிகளான விசிக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் அரசின் கொள்கை முடிவுகளைப் பொதுவெளியிலும் ஊடகங்களிலும் பகிரங்கமாக விமர்சித்து வருவது முதல்வர் விஜய்க்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மூடிய கதவுகளுக்குள் விவாதிக்கப்பட வேண்டிய கருத்து வேறுபாடுகள் சமூக வலைதளங்களில் பகிரங்கமாக விவாதிக்கப்படுவது, ஆட்சிக்கு தேவையில்லாத அவப்பெயரையே உருவாக்கும் என பனையூர் வட்டாரங்கள் கவலை தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக பனையூர் முகாமில் மேலிட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் விஜய், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தங்களது கோரிக்கைகளை நேரடியாகத் தெரிவிக்காமல் ஊடகங்கள் முன் நின்று அரசை விமர்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று காரசாரமாகச் சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகைய பகிரங்க விமர்சனங்கள் எதிர்க்கட்சிகளுக்கே சாதகமாக முடியும் என்பதால், கூட்டணி தர்மத்தை மதித்து தலைமைக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தாமல் செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கூட்டணிக் கட்சிகளின் திடீர் காரசாரமான விமர்சனங்களுக்குப் பின்னணியில் எதிர்க்கட்சியான திமுகவின் மறைமுகச் சதி இருக்கலாம் என்ற பலமான சந்தேகமும் தவெக வட்டாரத்தில் எழுந்துள்ளது. ஆளுங்கட்சிக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தி அரசியல் குழப்பத்தை உருவாக்க திமுக திரைமறைவில் காய்நகர்த்துகிறதா என்ற கோணத்தில் உளவுப் பிரிவு ஆராய்ந்து வரும் நிலையில், எதிர்க்கட்சியின் இந்த வியூகத்திற்கு கூட்டணிக் கட்சிகள் பலியாகிவிடக் கூடாது என்பதில் விஜய் தீவிரமாக உள்ளார்.
இந்த அரசியல் புயலுக்கு மத்தியில், விரைவில் வரவிருக்கும் 7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் முழு பலத்துடன் களமிறங்கி கிளீன் ஸ்வீப் வெற்றி பெற தவெக வியூகம் வகுத்து வருகிறது. இந்த இடைத்தேர்தல் வெற்றி மூலம் சட்டமன்றத்தில் தனிப்பட்ட பலத்தை அதிகரித்து, கூட்டணிக் கட்சிகளின் தேவையற்ற நிர்பந்தங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், பாமக மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை முதன்மையாகக் கொண்டு சுமுகமான ஆட்சியைத் தொடரவும் மேலிடம் திட்டமிட்டுள்ளது.
