“உன் டார்ச்சர் தாங்க முடியல.. செத்துடுறேன்”… சாவதற்கு முன் இளம்பெண் பேசிய உருக்கமான ஆடியோ…. கண்ணீரில் முடிந்த காதல் கதை…!

By Nanthini on சித்திரை 3, 2026

Spread the love

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே காதலித்து கரம் பிடித்த இளம்பெண், திருமணமான ஓராண்டிலேயே வரதட்சணை கொடுமை மற்றும் கணவரின் டார்ச்சர் காரணமாகத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பனிதிவயல் கிராமத்தைச் சேர்ந்த பி.எஸ்.சி பட்டதாரியான லாவண்யா, காருகுடியைச் சேர்ந்த தினேஷ் ராஜா என்பவரை நீண்ட நாட்களாகக் காதலித்து வந்துள்ளார். இருவருடையது வேறு வேறு சமுதாயம் என்பதால் லாவண்யாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், கடந்த 2025-ம் ஆண்டு பொங்கல் சமயத்தில் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி லாவண்யா தனது காதலன் தினேஷ் ராஜாவுடன் சென்று கோவையில் திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு கோவையில் வாடகை வீட்டில் தங்கி வசித்து வந்த நிலையில், தினேஷ் ராஜா தனியார் பேருந்து நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊரான காருகுடிக்குச் சென்றபோது, லாவண்யாவின் பெற்றோர் அவரைச் சமாதானப்படுத்தி நகைகளைச் சீதனமாக வழங்கி அனுப்பியுள்ளனர். ஆனால், இந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. தனக்கு கடன் சுமை அதிகமாக இருப்பதாகக் கூறிய தினேஷ் ராஜா, தனது தந்தை வீட்டிலிருந்து கூடுதல் பணம் மற்றும் நகைகளை வாங்கி வருமாறு லாவண்யாவை வற்புறுத்தியுள்ளார். இதனால் கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

   

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 10-ம் தேதி லாவண்யா கோவையில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து லாவண்யாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், கோவை ராமநாதபுரம் காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருமணமான ஓராண்டிலேயே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளதால், கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறும் லாவண்யாவின் குடும்பத்தினர், கணவர் மற்றும் அவரது உறவினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி வலியுறுத்தி வருகின்றனர்.

   

இதற்கிடையில், லாவண்யா உயிரிழப்பதற்கு முன்பு பேசிய உருக்கமான ஆடியோ ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், “உன்னுடைய ஒவ்வொரு கேள்வியும், டார்ச்சரும் தாங்க முடியவில்லை. எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ள முடியாது. நீ சொல், நான் உன்னை விட்டு விலகிப் போய்விடுகிறேன் அல்லது செத்துக்கூடப் போகிறேன்” என்று லாவண்யா கண்ணீருடன் பேசியுள்ளது கேட்போரைக் கலங்கச் செய்கிறது. இந்தக் குரல் பதிவு, தினேஷ் ராஜா கொடுத்த மன உளைச்சலுக்கு மிக முக்கிய ஆதாரமாகக் கருதப்படுகிறது. ஒரு அழகான காதல் வாழ்க்கை, வரதட்சணைப் பேயால் இப்படிப் பரிதாபமாக முடிந்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.