உத்தரப் பிரதேச மாநிலம் பாஜ்பத் பகுதியில், சந்தீப் என்பவன் தனது இரண்டாவது மனைவி மதுவைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, நேராகக் காவல் நிலையத்திற்குச் சென்று போலீஸாரிடம் சரணடைந்துள்ளான். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சந்தீப் தனது மனைவி மதுவை அங்குள்ள ஒரு மாந்தோப்பிற்கு அழைத்துச் சென்று, அங்கு அவளது கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளான். தனது மனைவி மது, ஷாம்லி பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் தொடர்ந்து தொலைபேசியில் பேசி வந்ததாகவும், அவர் மீது எழுந்த சந்தேகத்தின் காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாகவும் அவன் தெரிவித்துள்ளான்.
கடந்த 2006-ஆம் ஆண்டு சந்தீப்பிற்கு, மதுவின் மூத்த சகோதரியான பிரீத்தியுடன் முதல் திருமணம் நடைபெற்றது. திருமணமான 3 ஆண்டுகளில் பிரீத்தி நோயால் உயிரிழந்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். பிரீத்தியின் மறைவுக்குப் பிறகு, சில மாதங்களிலேயே சந்தீப்பிற்கு அவரது மைத்துனி மதுவுடன் இரண்டாவது திருமணம் செய்து வைக்கப்பட்டது. இவர்களுக்கு ஒரு மகள் உள்ள நிலையில், இந்தத் சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
