தஞ்சாவூர் மாவட்டம் மாதாக்கோட்டை காவேரி நகர் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய சூரையா என்பவர், ரஷ்யாவில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக முதல் மனைவி பிரிந்து சென்றார். அதனைத் தொடர்ந்து, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு விஜயகுமாரி என்ற உறவினர் பெண்ணை சூரையா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
கணவன்-மனைவி இருவருக்கும் இடையே வயது வித்தியாசம் அதிகமாக இருந்ததால், விஜயகுமாரியின் நடவடிக்கைகள் மீது சூரையாவுக்கு நீண்ட நாட்களாகவே சந்தேகம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக, தனது வீட்டின் ஹால் மற்றும் படுக்கையறை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்களை சூரையா பொருத்தியுள்ளார். தான் ரஷ்யாவில் இருந்தபடியே இணையத்தின் வழியாக மனைவியின் அன்றாட செயல்பாடுகளை அவர் 24 மணி நேரமும் கண்காணித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விசித்திரமான கண்காணிப்பு முறை காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவியிடம் சொல்லாமல் கொள்ளாமல் திடீரென சூரையா சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். வீட்டிற்கு வந்த அவர், விஜயகுமாரியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் தம்பதியினருக்கு இடையே மீண்டும் கடுமையான கருத்து வேறுபாடு வெடித்தது. இதற்கிடையில், விஜயகுமாரியின் சகோதரி குழந்தைக்கு நடைபெற்ற காதுகுத்து விழாவில் பங்கேற்பதற்காக அவர் வீட்டில் தயாராகிக் கொண்டிருந்தபோது, சூரையா அவரிடம் மீண்டும் பயங்கர வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
தகராறு முற்றவே, ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற சூரையா, மறைத்து வைத்திருந்த அரிவாளைக் காட்டி மிரட்டியதோடு, தனது பெற்ற குழந்தைகளின் கண்முன்னே மனைவியின் தலைமுடியைப் பிடித்து இழுத்து சரமாரியாகத் தாக்கியுள்ளார். இந்த கொடூரத் தாக்குதல் சம்பவம் முழுவதும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் அப்படியே பதிவாகியுள்ளது. இக்காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு விஜயகுமாரி அளித்த புகாரின் பேரில், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டில் இருந்து கொண்டு படுக்கையறை வரை கேமரா வைத்து கண்காணித்ததும், குழந்தைகளைப் பொருட்படுத்தாமல் தாயை கொடூரமாகத் தாக்கியதும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
