மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ண லால் யாதவ் (41) என்பவருக்கும், யாமினி (38) தம்பதிக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று வேலை முடிந்து வீட்டிற்கு வந்த கிருஷ்ண லால், தனக்கு உணவு சமைத்துத் தருமாறு மனைவியிடம் கேட்டுள்ளார். ஆனால், குடியிருப்பு வளாகத்தில் நடக்கும் நடன வகுப்பிற்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்த யாமினி, சமைக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ண லால், மதுபோதையில் தனது இரண்டு குழந்தைகளின் கண்முன்னேயே யாமினியின் கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் கடுமையான வலியால் அவதியுற்ற யாமினியை மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆரம்பத்தில் விபத்து மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் யாமினியின் கழுத்து எலும்பு முறிந்தும், குடலில் பலத்த காயங்கள் அடைந்தும் இறந்தது தெரியவந்தது. மருத்துவ ஆதாரங்களின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்திய மாங்காப்பூர் காவல்துறையினர், கிருஷ்ண லாலைக் கைது செய்து கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
