உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியைச் சேர்ந்த மிதுன் (27) மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த போக்கன் குமாரி (25) ஆகிய இருவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு தம்பதியரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் குடும்பத் தகராறு காரணமாக இருவரும் பிரிந்து வாழத் தொடங்கினர். கணவனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக மனைவி சந்தேகித்ததால் இந்த மோதல் வலுவடைந்துள்ளது. இதனால் போக்கன் குமாரி, மதுராவில் உள்ள தனது தோழி ராகினியின் வீட்டில் தங்கி அங்குள்ள ஒரு பியூட்டி பார்லரில் வேலை செய்து வந்துள்ளார்.
இதற்கிடையில், ஜான்சியில் வசித்து வந்த மிதுன், மதுராவில் இருக்கும் தனது மனைவியைத் தேடிக் கண்டுபிடித்து அங்கு சென்றுள்ளார். கோவர்தன் சாலையில் உள்ள சூர்யா நகர் காலனியில் கடந்த வியாழக்கிழமை இரவு இருவருக்கும் இடையே நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் விவாகரத்து வழக்கு தொடர்பாக கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நீதிமன்ற வழக்கை முடிவுக்குக் கொண்டு வருமாறு மிதுன் தனது மனைவியை வற்புறுத்தியுள்ளார். ஆனால், அதற்கு அவர் சம்மதிக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் கடும் ஆத்திரமடைந்த மிதுன், தான் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து மனைவி போக்கன் குமாரியை நோக்கிச் சுட்டுக் கொன்றார். பின்னர், அதே துப்பாக்கியால் தனது தலையிலும் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த துப்பாக்கிச் சூட்டில் தம்பதியர் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மதுரா நகர காவல்துறை மற்றும் தடயவியல் குழுவினர், உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
