சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் உள்ள கல்யாணம் அரசு பள்ளியில் நடந்த இந்த கொடூர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தைச் சேர்ந்த கஜேந்திர பிரசாத் சர்மா என்பவர் இப்பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளாக காவலாளியாக பணியாற்றி வந்த நிலையில், கடந்த ஜூன் 2-ஆம் தேதி தனது நாட்டைச் சேர்ந்த லட்சுமண பிரசாத் (40) என்பவரை இங்கு காவலாளி வேலைக்கு சேர்த்து விட்டுள்ளார். லட்சுமண பிரசாத் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் பள்ளி வளாகத்தில் உள்ள காவலாளி அறையிலேயே தங்கி வசித்து வந்தார். சமீபத்தில் அவரது மனைவியும் இரண்டாவது மகளும் நேபாளத்திற்குச் சென்றிருந்ததால், லட்சுமண பிரசாத் தனது மூத்த மகளான 4-ஆம் வகுப்பு படிக்கும் 9 வயது கீதாவுடன் மட்டும் பள்ளியில் தங்கியிருந்தார்.
வழக்கம்போல் நேற்று காலை பள்ளியின் ஓட்டுநர் அஸ்வின் வாகனத்தை எடுப்பதற்காகச் சென்றபோது, பள்ளியின் இரண்டாவது மாடியில் சிறுமி கீதா தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே பள்ளி ஊழியர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து சென்று பார்த்தபோது, தற்கொலைக்கு முயன்ற லட்சுமண பிரசாத் கயிறு அறுந்து கீழே விழுந்து மயங்கிய நிலையில் கிடப்பதும், அவரது மகள் கீதா சடலமாகத் தொங்குவதும் தெரியவந்தது. உடனடியாக சிந்தாதிரிப்பேட்டை போலீசாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த லட்சுமண பிரசாத்தை மீட்டு ஓமந்தூரர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், இன்று அதிகாலையில் அவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், லட்சுமண பிரசாத் தனது மகளைக் கொலை செய்துவிட்டுத் தானும் தற்கொலை செய்து கொண்டது உறுதியானது. இதனைத் தொடர்ந்து அவரது மனைவியை நேரில் வரவழைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன. இப்பள்ளியில் வேலைக்குச் சேருவதற்கு முன்பு லட்சுமண பிரசாத் குடும்பத்துடன் நுங்கம்பாக்கத்தில் வாடகைக்கு தங்கி, தனியார் ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அவரது மனைவி சுமிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ரயில்வே அதிகாரிகள் குடியிருப்பில் சமையல் வேலை செய்து வந்தபோது, அங்கு தண்ணீர் கேன் போட வரும் சந்தீப் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இப்பழக்கம் அவர்களுக்குள் திருமணத்தை மீறிய கள்ள உறவாக மாறியுள்ளது.
கணவன் வீட்டில் இல்லாத நேரங்களில் இருவரும் தனிமையில் இருந்து வந்துள்ளனர். ஒருமுறை வழக்கம் போல இருவரும் உல்லாசமாக இருந்தபோது, எதிர்பாராத விதமாக வீட்டிற்கு வந்த லட்சுமண பிரசாத், மனைவியை தவறான நிலையில் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதனால் தம்பதியினரிடையே அடிக்கடி கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்தன. லட்சுமண பிரசாத் பலமுறை எச்சரித்தும் சுமிதா தனது கள்ளத்தொடர்பைக் கைவிட மறுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்திலும் விரக்தியிலும், மனைவி தனது இரண்டாவது மகளுடன் நேபாளத்திற்குச் சென்றிருந்த சமயம் பார்த்து, லட்சுமண பிரசாத் சுமிதாவிற்கு வீடியோ கால் செய்துள்ளார். மனைவியின் கள்ளக்காதல் ஆசைக்குத் தனது மூத்த மகள் கீதாவைப் பலியாக்கித் தூக்கிலிட்டுக் கொன்றதோடு, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மனைவியின் கள்ள உறவால் ஒட்டுமொத்த குடும்பமே அழிந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
