தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகே உள்ள ஜெல்திம்மனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 35 வயதுடைய பாக்கியராஜ். இவருக்கும் நிவேதிதா (33) என்பவருக்கும் திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது; இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். வாழ்வாதாரத்திற்காக சென்னை கோயம்பேட்டில் கூலித்தொழில் செய்து வந்த பாக்கியராஜ், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே சொந்த ஊருக்கு வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்நிலையில், ஊரில் தனியாக வசித்து வந்த நிவேதிதாவிற்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிவகுமார் என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
நிவேதிதாவின் இந்தச் செயலை கவனித்த அக்கம் பக்கத்தினர், இது குறித்து சென்னை சென்றிருந்த பாக்கியராஜிடம் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து கொதிப்படைந்த பாக்கியராஜ், 15 நாட்களுக்கு முன்பு ஊருக்குத் திரும்பியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே அடிக்கடி கடும் வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன. இரு குடும்பத்தினரும் அவர்களை அழைத்துச் சமாதானம் செய்தும், கள்ளத்தொடர்பு விவகாரத்தில் அவர்களிடையே இருந்த மனக்கசப்பு தீரவில்லை எனத் தெரிகிறது.
இந்தச் சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன் – மனைவி இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, சிவகுமாருடன் நிவேதிதா நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவர் வைத்திருந்த செல்போனில் இருப்பதை பாக்கியராஜ் கண்டெடுத்துள்ளார். தன் மனைவியின் இத்தகைய செயலால் ஆத்திரமடைந்த பாக்கியராஜ், மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் நிவேதிதாவின் கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ளார்.
சம்பவம் நடந்த மறுநாள் காலை வீட்டின் கதவு திறக்கப்படாததால், பாக்கியராஜின் தந்தை ராஜாமணி உள்ளே சென்று பார்த்தபோது, நிவேதிதா சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து விரைந்து வந்த பஞ்சப்பள்ளி போலீசார், நிவேதிதாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரிடம் சரணடைந்த பாக்கியராஜ், தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். கள்ளக்காதலால் ஏற்பட்ட இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
