நெல்லையில் பட்டப்பகலில் பயங்கரம்… பேருந்து நிலையத்தில் மனைவியை துடிக்க துடிக்க வெட்டிக்கொன்ற கணவர்… அலறிய ஓடிய பயணிகள்..!!

By Soundarya on பங்குனி 15, 2026

Spread the love

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில், பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையிலேயே இளம்பெண் ஒருவர் தனது கணவரால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த மாவட்டத்தையும் உறைய வைத்துள்ளது. உயிரிழந்தவர் பேச்சியம்மாள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். பேருந்து நிலையத்தின் பரபரப்பான சூழலில் அரங்கேறிய இந்த வன்முறைச் செயல், அங்கு நின்றிருந்த பயணிகளிடையே பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

கொலை செய்யப்பட்ட பேச்சியம்மாளுக்கும் அவரது கணவர் சுதாகருக்கும் இடையே நீண்ட நாட்களாகக் குடும்பப் பிரச்சினை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. கருத்து வேறுபாடு காரணமாக ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சுதாகர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பேச்சியம்மாளை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

   

இந்தக் கொடூரச் செயலைச் செய்த கையோடு, சுதாகர் நேராகக் காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பேச்சியம்மாளின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்பப் பூசலால் பொது இடத்தில் ஒரு பெண்ணின் உயிர் பறிக்கப்பட்ட இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.