தெலுங்கானா மாநிலம் மஹபூப்நகர் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக கணவர் மனைவியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த நாகேஷ் மற்றும் அவரது மனைவி கவிதா தம்பதியினருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் வெளியூரில் தங்கி படித்து வரும் நிலையில், மற்ற இரு மகன்கள் பெற்றோருடன் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இவர்களது வீட்டிற்குள் ஏற்பட்ட மோதலின் உச்சகட்டமாக இந்த கொடூரக் கொலை அரங்கேறியுள்ளது.
சம்பவத்தன்று நாகேஷின் வீட்டிலிருந்து பயங்கர அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததுடன், வெளியில் இவர்களது இரண்டாவது மகன் பயத்துடன் நின்றுகொண்டிருந்தான். மக்கள் சத்தமிட்டதைத் தொடர்ந்து, சிறிது நேரம் கழித்து கவிதா கதவைத் திறந்துள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது நாகேஷ் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்தனர். கவிதா தனது இளைய மகனின் கண் முன்பாகவே கணவரை கத்தியால் குத்தியுள்ளார் என்பதும், அதைப்பார்த்து அந்த சிறுவன் அதிர்ச்சியில் உறைந்து அழுதுகொண்டிருந்ததும் தெரியவந்தது. உடனடியாக ஹைதராபாத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நாகேஷ், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் கவிதாவை உடனடியாகக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கவிதாவுக்கு வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், அதன் காரணமாக ஏற்பட்ட தகராறில் தான் இந்த கொலை நடந்திருக்கலாம் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்த சந்தேகத்தை காவல்துறையினர் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இக்கொலைக்கான உண்மையான பின்னணி குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
