உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியைச் சேர்ந்த தீபக் சர்மா என்ற வாலிபர், அண்மையில் காலமான தனது மாமியார் ஊர்மிளா தேவியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக கோண்டா மாவட்டத்தில் உள்ள உம்ரி கிராமத்திற்குச் சென்றிருந்தார். இறுதிச் சடங்கு நிகழ்வுகள் அனைத்தும் முடிந்த பிறகு, சடலத்தை எரிப்பதற்காக ஆற்றங்கரைக்கு அருகே உள்ள மயானத்திற்கு உறவினர்களுடன் தீபக் சர்மாவும் சென்றுள்ளார். காரியங்கள் முடிந்த பின், அவர் அங்கிருந்த ஆற்றில் இறங்கி குளிக்க முயன்றபோது, அந்த ஆற்றில் முதலைகள் நடமாட்டம் இருப்பதாகக் கூறி உள்ளூர் கிராம மக்கள் அவரை எச்சரித்துள்ளனர்.
இருப்பினும், அந்த எச்சரிக்கையை மீறி தீபக் சர்மா ஆற்றில் இறங்கியதாகத் தெரிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக, தண்ணீருக்குள் இருந்து திடீரென வெளிப்பட்ட ராட்சத முதலை ஒன்று தீபக் சர்மாவை ஆக்ரோஷமாகக் கடித்து ஆற்றுக்குள் இழுத்துச் சென்றது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்களும் கிராம மக்களும் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும் மீட்புப் படையினரும் தீபக் சர்மாவைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தற்போது வரை அவரது உடல் கிடைக்காததால், லக்னோவிலிருந்து மாநில மீட்புப் படை வீரர்கள் வரவழைக்கப்பட்டு தேடுதல் பணி மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாமியாரின் இறுதிச் சடங்கிற்கு வந்த இடத்தில் மருமகன் முதலையிடம் சிக்கிய இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
