மாமனார் வீட்டில் விபரீதம்… சமாதானம் பேசப்போன இடத்தில் உயிரோடு கொளுத்தப்பட்ட கணவன்… இணையத்தில் தீயாய் பரவும் சிசிடிவி காட்சி…!

By SATHISH R on ஆடி 5, 2026

Spread the love

பஞ்சாப் மாநிலத்தில், குடும்பத் தகராறு காரணமாகப் பிரிந்து சென்ற மனைவியை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வரச் சென்ற கணவனை, அவரது மைத்துனரே உயிரோடு தீ வைத்துக் கொளுத்திய கொடூரச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த கணவன் மற்றும் அவரைக் காப்பாற்ற முயன்ற பெண் ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பார்ப்போரை நெஞ்சம் பதற வைத்துள்ளது.

பஞ்சாபின் தர்ன் தாரன் மாவட்டத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கும், அவரது மனைவி சந்தீப் கவுருக்கும் இடையே கடந்த ஜூன் 13-ம் தேதி ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சந்தீப் கவுர் கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். இதனால் மனவேதனையடைந்த லவ்பிரீத் சிங், தனது மனைவியுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி அவரை மீண்டும் குடும்பம் நடத்த வீட்டிற்கு அழைப்பதற்காகத் தனது மாமியார் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு அவர் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தபோது இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.

   

லவ்பிரீத் சிங் சமாதானம் பேசிக் கொண்டிருந்த சமயத்தில், அங்கு வந்த அவரது மைத்துனர் சஜன் சிங் என்பவர், எதிர்பாராத விதமாக லவ்பிரீத் மீது எளிதில் தீப்பற்றக்கூடிய திரவத்தை ஊற்றியுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சஜன் சிங்கின் மைத்துனியான குர்ஜித் கவுர் என்பவர், லவ்பிரீத்தைக் காப்பாற்ற ஓடிவந்து சஜன் சிங்கைத் தடுக்க முயன்றார். ஆனால், சஜன் சிங் அவரை உதறித் தள்ளிவிட்டு, கொடூரமான முறையில் லவ்பிரீத் மீது தீயைப் பற்ற வைத்துள்ளார். நொடிப் பொழுதில் தீப்பொறி லவ்பிரீத் உடல் முழுவதும் பரவியதோடு, அந்த இடமே போர்க்களம் போல மாறியுள்ளது.

   

அங்கு பரவிய கொடூரத் தீயில் லவ்பிரீத் சிங், அவரைக் காப்பாற்ற முயன்ற குர்ஜித் கவுர் மற்றும் தீ வைத்த சஜன் சிங் ஆகிய மூன்று பேருமே சிக்கி அலறியடித்து ஓடினர். இதில் நிலைதடுமாறிய லவ்பிரீத் சிங் அருகிலிருந்த கழிவுநீர் கால்வாய்க்குள் விழுந்துள்ளார். பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட லவ்பிரீத் மற்றும் குர்ஜித் கவுர் ஆகிய இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர். தீ வைத்த சஜன் சிங்கும் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.