மகாராஷ்டிரா மாநிலத்தில் கணவரின் குடிப்பழக்கத்தால் மனம் உடைந்து மனைவி தன்னுடைய மூன்று சிறு குழந்தைகளுக்கும் விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தானேவை சேர்ந்த சந்தியா சந்தீப் என்ற அந்தப் பெண் கடந்த ஜூலை 20ஆம் தேதி தன்னுடைய 5, 8, 10 வயது மகள்களுக்கு பூச்சிக்கொல்லி கலந்த உணவை கொடுத்துள்ளார். உடல் நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மூன்று குழந்தைகளும் அடுத்தடுத்து உயிரிழந்தன.
முதலில் விபத்து மரணமாக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகு திசை மாறியது. குழந்தைகளின் உடலில் விஷம் இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கொலை வழக்காக மாறிய நிலையில் தாய் சந்தியா கைது செய்யப்பட்டுள்ளார். கணவரின் குடிப்பழக்கம் மற்றும் குழந்தைகளை பராமரிப்பதில் ஏற்பட்ட சிரமங்கள் காரணமாக இந்த கொடூர செயலில் ஈடுபட்டதாக அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
