டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ சார்பில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இன்றுடன் 13-வது நாளை எட்டியுள்ள இந்தப் போராட்டத்தில், மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் தேர்வு முறைகேடுகளுக்குக் கல்வி அமைச்சரின் ராஜினாமாவே முதல் தீர்வாக இருக்க வேண்டும் என்பதில் போராட்டக்காரர்கள் உறுதியாக உள்ளனர்.
இந்நிலையில், இந்த மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, பிரபல சமூக மற்றும் பருவநிலை செயற்பாட்டாளரான சோனம் வாங்சுக் மேற்கொண்டு வரும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் இன்று 5-வது நாளை எட்டியுள்ளது. அவருடன் சேர்ந்து பல்வேறு மாணவர் சங்க செயல்பாட்டாளர்களும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்று வருகின்றனர். தொடர் உண்ணாவிரதம் காரணமாக சோனம் வாங்சுக்கின் உடல்நிலை தற்போது மிகவும் மோசமடைந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்துப் போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தி வரும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே தனது எக்ஸ் பக்கத்தில் கவலை தெரிவித்துள்ளார். சோனம் வாங்சுக்கின் இரத்த சர்க்கரை அளவு வெறும் 60 மி.கி. ஆகக் குறைந்துள்ளதாகவும், அவரது இரத்த அழுத்தமும் மிக மோசமான நிலைக்குச் சரிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், “சோனம் வாங்சுங்கிற்கு ஏதேனும் நேர்ந்தால் அதற்கு மத்திய அரசே முழுப் பொறுப்பு” என்றும் அபிஜீத் திப்கே மிகக் காட்டமாக எச்சரித்துள்ளார்.
சோனம் வாங்சுக் தவிர, ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வரும் மாணவர் அமைப்பைச் சேர்ந்த 6 மாணவர்களின் உடல்நிலையும் கவலைக்கிடமாக உள்ளது. இதில் ஜே.என்.யு மாணவர் தலைவர் தனிஷ் என்பவரின் சர்க்கரை அளவும் 61 ஆகக் குறைந்துள்ளதுடன், அமீன் மற்றும் தீபக் குமார் வர்மா ஆகிய மாணவர்களின் உடல்நிலை மிக மோசமடைந்ததை அடுத்து, அவர்களை உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். நாளுக்கு நாள் டெல்லியில் தீவிரமடைந்து வரும் இந்த இளைஞர் பட்டாளத்தின் போராட்டம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
