“தண்ணீரைத் திறந்து வைத்தும் தப்ப முடியாத மரணப் பொறி…!” தீ விபத்தில் குளியலறைக்குள் முடங்கிய குஜராத் குடும்பத்திற்கு நேர்ந்த கொடூரம்…!

By Swetha on ஆடி 3, 2026

Spread the love

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள வூஸ்டர் நகரில் செயல்பட்டு வரும் எகானோ லாட்ஜ் என்ற மோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தின் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் குஜராத்தின் நாடியாட் பகுதியைச் சேர்ந்த ஹிதேஷ் சுதார், அவரது மனைவி ஹீனா மற்றும் 20 வயதான மகள் இஷானி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சிறந்த எதிர்காலத்தைத் தேடி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் இந்த குடும்பத்தினர் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்துள்ளனர்.

ஹிதேஷ் சுதார் அந்த மோட்டலிலேயே வேலை பார்த்து வந்ததால், அவர்கள் மோட்டல் வளாகத்தில் உள்ள பணியாளர் குடியிருப்பிலேயே வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், நள்ளிரவு சுமார் 1:30 மணியளவில் அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மளமளவென பரவியதால் அறையிலிருந்து வெளியேற முடியாத ஹிதேஷ், மோட்டலின் வரவேற்பறைக்குத் தொடர்புகொண்டு கண்ணீருடன் உதவி கேட்டுள்ளார். அப்போது, குளியலறைக்குள் சென்று தண்ணீரைத் திறந்துவிட்டு, மீட்புக் குழுவினர் வரும்வரை அங்கேயே பாதுகாப்பாக இருக்குமாறு வரவேற்பறையில் இருந்த ஊழியரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தங்களைக் காப்பாற்றிக்கொள்ள அவர்கள் மூவரும் குளியலறைக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டனர்.

   

இருப்பினும், தீயின் தீவிரம் கடுமையாக இருந்ததால் தீயணைப்பு வீரர்களால் அவர்களை உடனடியாக நெருங்க முடியவில்லை. மீட்புக் குழுவினர் பலமுறை முயன்றும் அவர்களைக் காப்பாற்ற முடியாத நிலையில், குளியலறைக்குள் அதிகப்படியான நச்சுப்புகை புகுந்ததால் மூச்சுத் திணறி மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து அமெரிக்க போலீசார் தொடர்ந்து விசாரித்து வரும் நிலையில், இந்த துயரச் சம்பவம் அவர்களது சொந்த ஊரான குஜராத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.