எம்ஜிஆர் படங்களில், அவரது சினிமா வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் நாடோடி மன்னன். படத்தின் பாதி வரை கருப்பு வெள்ளையிலும், இடைவேளைக்கு பிறகு வண்ணத்திலும் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக எம்ஜிஆருக்கு அமைந்தது. அப்போது சென்னையில் நாடோடி மன்னன் படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் பங்கேற்க எம்ஜிஆரை, அந்த படத்தில் வரும் மன்னர் மார்த்தாண்டன் போல அலங்கரித்து குதிரை சாரட் வண்டியில் விழாவுக்கு அழைத்து வந்துள்ளனர், விழா ஏற்பாட்டாளர்கள். அங்கு நடந்த வரலாற்று சிறப்பு மிக்க அந்த விழாவில் எம்ஜிஆருக்கு 100 சவரனில் தங்க வாள் பரிசளிக்கப்பட்டுள்ளது.

#image_title
அந்த வாளை ராமாவரம் தோட்டத்தில் எம்ஜிஆர் நினைவு பொருளாக வைத்துக்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொல்லூரில் உள்ள தாய் மூகாம்பிகை கோவிலுக்கு அன்பளிக்க வழங்கிவிட்டார் எம்ஜிஆர். அங்குள்ள தாய் மூகாம்பிகையின் கையில் அந்த தங்க வாள் இருக்கும்படி செய்திருக்கிறார் எம்ஜிஆர். இதை பார்த்த பலரும் ஆச்சரியப்பட்டு போய், இந்த 100 சவரன் தங்க வாளை நீங்களே வைத்திருக்கலாமே என கூறியிருக்கின்றனர்.

#image_title
அதற்கு பதிலளித்த எம்ஜிஆர், 100 கிராம் சவரன், அதன் மதிப்பு எல்லாம் முக்கியம் அல்ல. அது வாள். அந்த வாள் மூகாம்பிகையின் கைகளில்தான் இருக்க வேண்டும், கொல்லூரில் அந்த மூகாம்பிகை அராஜகத்தை அழிப்பவள், அநீதியை அழிப்பவள், அக்கிரமத்தை கொல்பவள், தீமைகளை அழித்து நன்மைகளை தருபவளாக இருப்பதால் அந்த தாயின் கைகளில்தான் அந்த வாள் இருக்க வேண்டும் என்று கூற, மற்றவர்கள் அசந்து போயிருக்கின்றனர். அது மட்டுமின்றி எம்ஜிஆர் எந்த வாளை பார்த்தாலும் அது எந்த காலத்தில், எந்த தேசத்தில் யார் பயன்படுத்தியது என்ற விவரங்களை எல்லாம் சொல்லி விடுவார். எவ்வளவு எடை இருந்தாலும், அந்த வாளை எடுத்து ஒரு கையால் அப்படியே சுழற்றி விடுவார் என்று சினிமா விமர்சகர் எல்வி ஆதவன் ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.
