சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த 29 வயது இளம்பெண் ஸ்ருதி, பாரிமுனையில் உள்ள வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையில் கணக்காளராக பணியாற்றி வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை அவர் வழக்கம்போல் பணியில் இருந்தபோது, அவர் பெயருக்கு ஒரு பெரிய அட்டைப்பெட்டி பார்சல் வந்துள்ளது. தான் ஏதும் ஆர்டர் செய்யவில்லை என்று அவர் கூறியபோதும், முகவரி சரியாக இருந்ததால் கடையின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் முன்னிலையில் அந்த பார்சல் பிரிக்கப்பட்டது.
அட்டைப்பெட்டியைத் திறந்து பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். அதற்குள் ஒரு மனித மண்டை ஓடு, எலும்புகள் மற்றும் சாம்பல் ஆகியவை வைக்கப்பட்டிருந்தன. இதனால் பயந்துபோன ஸ்ருதி, உடனடியாக எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விரைந்து வந்த போலீசார் அந்தப் பொருட்களைக் கைப்பற்றியதுடன், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணையில் இறங்கினர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இந்த வினோதமான மற்றும் அச்சமூட்டும் செயலின் பின்னணியில் இருந்த ‘ட்விஸ்ட்’ வெளிச்சத்திற்கு வந்தது. ஸ்ருதியின் தம்பிக்கும் ஓட்டேரியைச் சேர்ந்த தினேஷ் குமார் என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த பகையின் காரணமாக, ஸ்ருதியையும் அவரது தம்பியையும் பயமுறுத்தி மிரட்டுவதற்காக தினேஷ் குமார் இத்தகைய விபரீத செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்தச் சதியில் தினேஷ் குமாருக்கு உதவியாக அவரது நண்பர்களான சீனிவாசன் மற்றும் ஜோசப் ஆகியோரும் செயல்பட்டுள்ளனர். தற்போது இந்த மூன்று பேரையும் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் ஒரு பெண்ணுக்கு இடுகாட்டுப் பொருட்களைப் பார்சலில் அனுப்பி மிரட்டிய இச்சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
