கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டமான ஆனேக்கல் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணமூர்த்தி (என்கிற) கிட்டி (64) என்ற முதியவர் வசித்து வந்தார். இவர் அதே பகுதியில் வசிக்கும் பள்ளிச் சிறுமிகளை குறிவைத்து, அவர்களுக்கு சாக்லேட் மற்றும் தின்பண்டங்கள் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, பெற்றோர்கள் வேலைக்குச் சென்ற பிறகு, பள்ளியிலிருந்து வீடு திரும்பி தனியாக இருக்கும் சிறுமிகளை அவர் தனது வக்கிர புத்திக்கு இரையாக்கியுள்ளார்.
சம்பவத்தன்று, இரண்டாம் வகுப்பு பயிலும் சிறுமி ஒருத்தி பள்ளி முடிந்து வீட்டில் தனியாக இருந்ததைப் பயன்படுத்திக் கொண்ட கிருஷ்ணமூர்த்தி, அந்தச் சிறுமிக்கு சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அன்றைய தினம் இரவு வேலை முடிந்து வீடு திரும்பிய பெற்றோரிடம், அந்தச் சிறுமி தனக்கு நேர்ந்த துயரத்தை அழுதுகொண்டே விவரித்தாள். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக ஆனேக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் விரைந்து செயல்பட்ட காவல்துறையினர் முதியவர் கிருஷ்ணமூர்த்தியைக் கைது செய்தனர். அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த மேலும் இரண்டு சிறுமிகளிடமும் அவர் இதுபோன்று சாக்லேட் தருவதாகக் கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. ஒரு முதியவர் பேரக்குழந்தைகள் வயதில் உள்ள சிறுமிகளிடம் இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்ட கிருஷ்ணமூர்த்தி மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து மூத்த காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வீட்டில் தனியாக விடும்போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும், இத்தகைய நபர்களிடம் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
