ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள செக்டார் 62 சந்தைப் பகுதியில் பர்கர் வண்டியில் ஏற்பட்ட தகராறில், டெல்லியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மனிதவள மேலாளராக பணியாற்றி வந்த லக்ஷ்மண் பரத்வாஜ் (45) என்ற நபர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். அவருடன் வந்த அவருடைய உறவினர் மகேஷ் என்பவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க வந்த இருவரும் பர்கர் சாப்பிடச் சென்ற இடத்தில், பர்கர் வியாபாரியுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு இருந்த சில இளைஞர்கள் லக்ஷ்மண் மற்றும் மகேஷைத் தாக்கத் தொடங்கினர். இந்த மோதலின் போது, ஒரு இளைஞர் லக்ஷ்மணைக் கத்தியால் குத்தியதில் அவர் பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.
தாக்குதல் நடத்திய இளைஞர்கள் மதுபோதையில் இருந்ததாகவும், அப்பகுதியில் பலர் பகிரங்கமாக மது அருந்தி இடையூறு செய்வதாகவும் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
