“கால் டாக்ஸி டிரைவரின் பயங்கரம்… 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய ஆசாமி சிக்கியது எப்படி?… சினிமாவை மிஞ்சிய சேஸிங்”…!!!

By Muthu Mani on சித்திரை 29, 2026

Spread the love

கன்னியாகுமரி மாவட்டத்தில், 17 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாச வீடியோ காட்டி மிரட்டி நகை திருடிய கால் டாக்சி டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் தாய் மஸ்கட் நாட்டில் செவிலியராகப் பணியாற்றி வந்த நிலையில், சிறுமி தனது முதிய தாத்தா பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். அந்தச் சமயத்தில், இவர்களது வீட்டின் மேல்தளத்தில் வாடகைக்குக் குடிவந்த ஜஸ்டாலீஸன் (42) என்பவர், தாத்தா பாட்டிக்கு உதவுவது போல நடித்து குடும்பத்தினரின் நம்பிக்கையைப் பெற்றுள்ளார். 2024-ம் ஆண்டு சிறுமி குளித்துக் கொண்டிருந்தபோது, அதனை ரகசியமாக வீடியோ எடுத்த ஜஸ்டாலீஸன், அதை இணையத்தில் பரப்பி விடுவதாக மிரட்டி சிறுமியைத் தனது அறைக்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

தொடர்ந்து அந்த வீடியோக்களைக் காட்டி மிரட்டி, சிறுமியைப் பலமுறை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதுடன், அவரது வீட்டிலிருந்த 5 சவரன் தங்க நகைகளையும் ஜஸ்டாலீஸன் திருடியுள்ளார். நகைகள் திருடு போனது குறித்து சிறுமியின் தாய் போலீசில் புகாரளித்தபோது, உண்மையைக் கூறினால் வீடியோவை வெளியிட்டு விடுவேன் என மிரட்டியதால் சிறுமி மௌனம் காத்துள்ளார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் சிறுமி தற்கொலைக்கும் முயன்றுள்ளார். இதற்கிடையில், நகைகளுடன் தப்பியோடிய ஜஸ்டாலீஸன் தலைமறைவாகி, ஒரு வருடத்திற்கும் மேலாக உல்லாசமாக ஊர் சுற்றி வந்துள்ளார்.

   

நீண்ட நாட்களாகப் பயத்தில் இருந்த அந்தச் சிறுமி, சமீபத்தில் யூடியூபில் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றைப் பார்த்துள்ளார். அதன் மூலம் தைரியம் பெற்ற அவர், குளச்சல் மகளிர் காவல் நிலையத்தில் ஜஸ்டாலீஸனுக்கு எதிராக விரிவான புகார் அளித்தார். அதனடிப்படையில், கொலை மிரட்டல், தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தியது மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த குற்றவாளியைத் தேடி வந்த தனிப்படை போலீஸார், செல்போன் டவர் லொகேஷன் உதவியுடன் சென்னையில் பதுங்கியிருந்த ஜஸ்டாலீஸனை சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.

   

கைது செய்யப்பட்ட ஜஸ்டாலீஸன் நாகர்கோவில் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். விசாரணையில், அவர் ஏற்கனவே பல குற்றச் செயல்களில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. “வீடுகளை வாடகைக்கு விடுவோர், குடியேறும் நபர்களின் பின்னணியை முறையாக விசாரிக்காமல் விடுவது இத்தகைய விபரீதங்களுக்கு வழிவகுக்கிறது” என்று போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். துணிச்சலாகப் புகார் அளித்த சிறுமியின் செயல் தற்போது பாராட்டுக்களைப் பெற்று வருவதோடு, போக்சோ விழிப்புணர்வு வீடியோக்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வளவு பெரிய ஊக்கமாக அமைகிறது என்பதற்கும் இந்தச் சம்பவம் ஒரு உதாரணமாகத் திகழ்கிறது.