நம் வீட்டில் அம்மா, அப்பா பாட்டி தாத்தா என முதியோர்கள் கட்டாயம் இருப்பார்கள். முதியோர்கள் ஆகிவிட்டாலே அவர்கள் குழந்தைகள் மாதிரி தான். அந்த வயது முதிர்ந்த குழந்தைகளை எப்படி கனிவோடு பார்த்துக் கொள்வது அவர்களது எதிர்பார்ப்புகள் என்ன என்பதை பற்றி இனி காண்போம்.
வயதாகி விட்டாலே அவர்கள் நம்மைப் போல் இருக்க மாட்டார்கள். உடலளவிலும் சரி மலதளவிலும் சரி அவர்கள் பலவீனமாகத்தான் இருப்பார்கள். நாம் பரபரப்பாக வாழ்க்கையில் ஓடிக்கொண்டிருக்கிறோம் என்றால் அவர்கள் ஓடிக் கொண்டு இருந்து தற்போது அமர்ந்திருக்கிறார்கள். அதனால் நம்முடைய டென்சன்களையும் கோபத்தையும் அவர்களிடத்தில் காட்டக்கூடாது.
முதலில் அவர்கள் இல்லையேல் நாம் இல்லை என்பதை முதலில் நினைக்க வேண்டும். முதியோர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் அவர்களிடம் உட்கார்ந்து கொஞ்ச நேரம் யாராவது பேச மாட்டார்களா என்பது தான். அவர்களுக்கு என்ன வேண்டும் வேண்டாம் என்பதை கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.
முதியோர்கள் எந்த ஒரு விஷயம் ஆனாலும் கேட்டு வாங்கி செய்ய வேண்டும் அது உணவாக இருந்தாலும் மருந்தாக இருந்தாலும் எதுவாக இருந்தாலும் அதை விரும்ப மாட்டார்கள். நேரத்திற்கு தகுந்தாற்போல் அவர்களுக்கு என்ன வேண்டும் என்பதை நாம் தான் உணர்ந்து செய்ய வேண்டும். அவர்களிடம் குறைகள் இருந்தாலும் அதை வெளியே கூறாதீர்கள். அது அவர்களின் மனதை மிகவும் பாதிக்கும்.
அவர்களிடம் எதையுமே கத்தி சத்தம் போட்டு சண்டை இட்டு கூறாதீர்கள். அன்பாக புரிய வையுங்கள். அவர்கள் இருப்பது பாரம் என்பதைப் போல உணர்த்தி விடாதீர்கள். ஏனென்றால் காலம் கடந்த பின்பு செய்யும் காரியங்கள் பலனளிக்காது. அதனால் நம் வீட்டில் முதியோர்கள் இருந்தால் அவர்களை முடிந்தவரை கனிவோடு பார்த்துக் கொள்ளுங்கள். அவர்கள் மனதார நம்மை ஆசீர்வதித்தால் நிச்சயம் நம் வாழ்க்கையில் நல்லது நடக்கும்.