வீட்டில் தயாரித்த இஞ்சி, பூண்டு விழுது 3 மாதம் வரை கெட்டுப் போகாமல் இருக்க… இதோ உங்களுக்கான சூப்பர் டிப்ஸ்…!

By Nanthini on கார்த்திகை 1, 2025

Spread the love

பொதுவாகவே இந்திய உணவு வகைகளில் இஞ்சி பூண்டு விழுது என்பது பிரிக்க முடியாத ஒரு பகுதியாக மாறிவிட்டது. சாதாரண குழம்புகளில் தொடங்கி பிரியாணி வரை இந்த மசாலாவை சேர்ப்பது ஒவ்வொரு உணவிற்கும் கூடுதல் சுவை தருகின்றது. இதன் தனித்துவமான வாசனை மற்றும் சுவை காரணமாக அதனை தவிர்த்து சமையல் செய்வதை பெரும்பாலானவர்கள் விரும்புவது கிடையாது.

இவ்வாறு நாம் செய்யும் அனைத்து சமையலுக்கும் தினமும் பயன்படுத்தும் இஞ்சி பூண்டு விழுதை கடைகளில் வாங்கி பயன்படுத்துவதை விட வீட்டில் உள்ள மசாலா பொருட்களை சேர்த்து அரைப்பது கூடுதல் சுவை தரும். கடைகளில் வாங்கி பயன்படுத்தும் போது உடலுக்கு கிடைக்கக்கூடிய ஆரோக்கிய நன்மைகள் கிடைக்காமல் பக்கவிளைவுகள் அதிகமாக ஏற்படும். எனவே வீட்டில் தயாரிக்கப்பட்ட இஞ்சி பூண்டு விழுது பயன்படுத்துவது தான் சிறந்தது. அவ்வாறு வீட்டில் தயாரிக்கும் போது அதனை நீண்ட காலத்திற்கு எவ்வாறு பாதுகாப்பாக வைப்பது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

   

இஞ்சி பூண்டு விழுது வீட்டில் தயாரிக்க வேண்டும் என்று ஆரம்பித்தால் இஞ்சி மற்றும் பூண்டை தனித்தனியாக கழுவி தோல் நீக்கி சம விகிதத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

   

ஒரு கப் நறுக்கிய இஞ்சியை ஒரு கப் உரிக்கப்பட்ட பூண்டு பல் சேர்த்து எடுத்துக் கொள்ளவும். சமவிகிதத்தில் இல்லாத போது விரைவில் கெட்டுப் போவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும்.

 

பேஸ்ட் செய்ய புதிய பூண்டு மற்றும் இஞ்சியை பயன்படுத்துவதை உறுதி செய்யுங்கள். இரண்டும் நன்றாக சுத்தம் செய்யப்பட்டதும் அவற்றை ஒரு சமையலறை தூண்டில் வைத்து நன்றாக உலர வைத்து பயன்படுத்த வேண்டும். அரைக்கும் போது தண்ணீர் சேர்க்கக்கூடாது.

இஞ்சி பூண்டு விழுதை தயார் செய்ததும் அதனை கண்ணாடி அல்லது ஸ்டீல் பாத்திரத்தில் தான் சேமித்து வைக்க வேண்டும்.

பிளாஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்தும் போது வாசனையை ஈர்த்து கெட்டுப்போக காரணமாகும். விழுதை எடுக்க எப்போதும் உலர்ந்த ஸ்பூனை பயன்படுத்த வேண்டும். ஈரமான ஸ்பூன் பயன்படுத்தினால் விழுது விரைவில் கெட்டுப் போகும்.

ஒவ்வொரு முறையும் சமையலுக்கு இஞ்சி பூண்டு விழுது எடுத்த பிறகு மூடியை காற்று புகாமல் இறுக்கமாக மூடி வைக்க வேண்டும்.

இஞ்சி பூண்டு விழுது தயாரித்த பிறகு 1 1/2 தேக்கரண்டி சூரியகாந்தி எண்ணெய் அல்லது வேர்கடலை எண்ணையுடன் ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து மீண்டும் கலக்கி காற்று புகாத கண்ணாடி ஜாடியில் சேமிக்க வேண்டும். உப்பு ஒரு இயற்கை பதப்படுத்தியாகவும் எண்ணெய் பாக்டீரியா வளர்ச்சியை தடுக்கவும் பெரிதும் உதவுகிறது.

அதிக அளவில் விழுது தயாரித்தால் ஐஸ் டிரேக்களில் உறைய வைத்து ஜிப்லாக் பைகளில் சேமிக்கலாம். இவ்வாறு சேமிக்கும் போது மூன்று மாதங்கள் வரை ப்ரஷ்ஷாக இருக்கும்.

மேலும் மஞ்சள் தூள் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்தால் விழுது கெட்டுப் போகாமல் அதன் நிறம் மற்றும் சுவை மாறாமல் அப்படியே இருக்கும்.