தமிழகத்தில் அண்மையில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 97 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முகவரி மாற்றம் மற்றும் பல்வேறு காரணங்களால் பட்டியலில் இருந்து விடுபட்டவர்கள், தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்ற மீண்டும் பெயரைச் சேர்க்க தேர்தல் ஆணையம் வழிவகை செய்துள்ளது.
இதற்காக வரும் நாட்களில் நடத்தப்படவுள்ள சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் கலந்துகொண்டு, ‘படிவம் 6’-ஐ பூர்த்தி செய்து வழங்க வேண்டும். வயது மற்றும் வசிப்பிட முகவரிக்கான சான்றுகளுடன் விண்ணப்பிப்பதன் மூலம் விடுபட்ட பெயர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் இணைக்க முடியும்.
பெயரைச் சேர்க்க விரும்புவோர் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, பிறப்பு சான்றிதழ் அல்லது பாஸ்போர்ட் உள்ளிட்ட 12 அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை ஆதாரமாகச் சமர்ப்பிக்கலாம். முந்தைய தேர்தல்களில் வாக்களித்திருந்தால் அந்த இடத்தைக் குறிப்பிடுவதுடன், தற்போது வசிக்கும் முகவரிக்கான சரியான ஆவணங்களை இணைப்பது அவசியமாகும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை உறுதி செய்ய ஆன்லைன் வசதிகளையும் தேர்தல் ஆணையம் ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்தி தகுதியுள்ள அனைத்து குடிமக்களும் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து, எதிர்வரும் தேர்தல்களில் தங்களின் வாக்குரிமையை உறுதி செய்ய வேண்டும்.
