“அதிமுக டெபாசிட் கூட வாங்காது”… திமுக – தேமுதிக டீலிங் முடிந்தது எப்படி?… எடப்பாடிக்கு எதிராக பொங்கும் புகழேந்தி… தமிழக அரசியலில் பரபரப்பு…!!!

By Rajeshwari on பங்குனி 9, 2026

Spread the love

அதிமுக முன்னாள் செய்தித் தொடர்பாளரும், தற்போதைய புரட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மைச் செயலாளருமான புகழேந்தி, அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தான் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை திமுக கூட்டணிக்கு அனுப்பி வைத்ததாக ஒரு அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளார்.

மேலும், “எடப்பாடி பழனிசாமி உங்களை முதுகில் குத்திவிடுவார்” என்று பிரேமலதாவிடம் எச்சரித்த வேலுமணி, அவரை திமுக கூட்டணிக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியதாகவும், அதன் காரணமாகவே தேமுதிகவுக்கு திமுக ஒரு ராஜ்யசபா இடத்தைக் கொடுத்துள்ளதாகவும் புகழேந்தி அந்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் அதிமுக தமிழகம் முழுவதும் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்படும் என்றும், கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் அக்கட்சி டெபாசிட் கூட வாங்காது என்றும் புகழேந்தி சாடினார்.

   

இதனால் அதிமுகவை பாஜகவிடம் எடப்பாடி பழனிசாமி அடமானம் வைத்துவிட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் திமுக ஆகிய கட்சிகளுக்கிடையே தான் வரும் காலத்தில் போட்டி இருக்கும் என்றும் கணித்துள்ளார். அதிமுகவின் தொண்டர்கள் தற்போது பலம் இழந்து தவிப்பதாகவும், அவர்களைப் பாதுகாக்கவும் மீட்டெடுக்கவுமே தான் புதிய இயக்கம் தொடங்கியுள்ளதாகவும், 234 தொகுதிகளிலும் போட்டியிடும் முட்டாள்தனமான அறிவிப்புகளைத் தான் வெளியிடப் போவதில்லை என்றும் அவர் தனது பேட்டியில் காட்டமாகத் தெரிவித்தார்.