“நான் இலவசமான மூனு பாட்டு பாடுறேன்.. அது சிவாஜிக்குப் பிடிக்கலன்னா இனிமே பாடவே மாட்டேன்”.. TMS விட்டசவால்!

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி என இருவரும் கோலோச்சிய 60 கள் மற்றும் 70 களில் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் டி எம் சௌந்தர்ராஜன். இருவருக்குமே தன்னுடைய குரலை அவர்களுக்கு ஏற்றார்போல மாற்றி பாடும் வல்லமை பெற்றவர் டி எம் எஸ். அவர் பாடிய பல பாடல்கள் இன்றும் எவர்க்ரீன் ஹிட்ஸ்களாக கேட்கப்பட்டு வருகின்றன.

ஆனால் ஒரு கட்டத்தில் புதிய பாடகர்களின் வரவு மற்றும் எம் ஜி ஆரோடு ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனை காரணமாக டி எம் எஸ் தன்னுடைய பாடும் வாய்ப்புகளை வெகுவாக இழந்தார். இளையராஜாவின் வருகைக்குப் பிறகு எஸ் பி பாலசுப்ரமண்யம் மற்றும் ஜேசுதாஸ் ஆகியோர் முன்னணி பாடகர்களாக உருவாகினர்.

   

டி எம் எஸ் தனது தொடக்க காலத்தில் வாய்ப்புகளை எளிதாகப் பெற்றுவிடவில்லை. அவருக்கு எம் ஜி ஆரின் சில படங்களில் பாடல்கள் பாடும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனாலும் அவரது பாடல்கள் மிகப்பெரிய ஹிட் ஆகி அவரை பிரபல பாடகராக மாற்றவில்லை. இந்நிலையில் சிவாஜிக்காக அவர் முதல் முறை அனைத்துப் பாடல்களையும் பாடிய திரைப்படம்தான் தூக்கு தூக்கி. அந்த படம்தான் அவருக்கு ஒரு தனித்த அடையாளத்தைப் பெற்றுத் தந்துள்ளது.

இந்த படத்துக்கான வாய்ப்பை டி எம் எஸ் பெற்றதே ஒரு சுவாரஸ்யமான பின்னணி. அப்போது சிவாஜி கணேசனுக்கு சிவாஜிக்கு சிதம்பரம் எஸ்.ஜெயராமன் தான் தொடர்ந்து பாடல்கள் பாடி வந்துள்ளார். அவர் குரல் சிவாஜிக்கு கணக்கச்சிதமாக பொருந்தியதாக ஒரு பேச்சு இருந்தது. ஆனால் தூக்கு தூக்கி படத்தில் பாடல்கள் பாட ஜெயராமன் அதிக சம்பளம் கேட்டதால் பாடலை பாடும் வாய்ப்பு டி எம் எஸ்க்கு சென்றது. ஆனால் சிவாஜியோ தனக்கு ஜெயராமன்தான் பாடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார்.

அப்போது வாய்ப்பை எப்படியாவது பெறவேண்டும் என்பதால் “இந்த படத்தில் நான் 3 பாடல்களை இலவசமாக பாடுகிறேன். பாடலை சிவாஜிக்குக் கொடுங்கள். அவர் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டால் நான் பாடுவதையே விட்டுவிட்டு வேறு வேலைக்குப் போய்விடுகிறேன்” என்று கூறி இலவசமாகப் பாடிக் கொடுத்துள்ளார். அந்த பாடல்களைக் கேட்ட சிவாஜி கணேசனுக்கு பிடித்துப் போய்விட “இந்த படத்தில் எல்லா பாடலையும் நீங்களே பாடுங்கள்” எனக் கூறிவிட்டாராம். அதன் பிறகு தொடர்ச்சியாக சிவாஜி கணேசனுக்கு டி எம் எஸ் பாடினார்.