திரை உலகின் இசை ஜாம்பவானாக இசை கடவுளாக அறியப்பட்டவர் எம் எஸ் விஸ்வநாதன். மெல்லிசை மன்னன் என்று போற்றப்பட்ட இவர் ஆரம்ப காலகட்டத்தில் எப்படி தனது திரை பயணத்தை தொடங்கினார் என்பது பலருக்கும் தெரிந்திருக்காது.
முதல் முதலில் எம் எஸ் விஸ்வநாதன் ஜூபிட்டர் பிக்சர்ஸில் ஆபீஸ் பாயாக வேலைக்கு சேர்ந்துள்ளார். அப்போது அவருக்கு மாதம் மூன்று ரூபாய் சம்பளம். அந்த வேலையில் இருந்து பதவி உயர்வு பெற்று அந்த நிறுவனத்தில் இருக்கும் இசைக்கருவிகளை தொட்டுப் பார்க்கும் அளவிற்கு வந்தார் எம் எஸ் விஸ்வநாதன்.
சிறு வயது முதலே இசையின் மீது அதீத ஆர்வம் கொண்ட இவர் யாரும் இல்லாத சமயத்தில் இசைக்கருவிகளை வாசித்துப் பார்த்து ஆனந்தம் அடைந்துள்ளார். ஜுபிடர் பிக்சர்ஸில் இசையமைப்பாளராக இருந்தவர் எஸ் எம் சுப்பையா நாயுடு.

#image_title
எத்தனையோ படங்களுக்கு சுலபமாக இசை அமைக்கும் சுப்பையா நாயுடு ஒரு நாள் ஒரு பாடலுக்கு மெட்டு அமைக்க முடியாமல் திணறியுள்ளார். சுப்பையா நாயுடு அங்கிருந்து சென்றவுடன் எம் எஸ் விஸ்வநாதன் அந்த இடத்திற்கு வந்து ஒரு மெட்டு போட்டு உள்ளார்.
இதனை தற்செயலாக அங்கு வந்த சுப்பையா நாயுடு கேட்டுவிட்டு எம் எஸ் விஸ்வநாதனை பாராட்டியதோடு அந்த மெட்டையே தனது பாடலில் பயன்படுத்திக் கொண்டார். ஆனால் அது எம் எஸ் விஸ்வநாதன் போட்ட மெட்டு என்று அவர் யாரிடமும் கூறவில்லை.
இப்படி ஒரு படத்திற்கு இரண்டு பாடல்களுக்கு சுப்பையா நாயுடு மெட்டு போட்டால் மற்ற இரண்டு பாடல்களுக்கு எம் எஸ் விஸ்வநாதனை மெட்டு போட சொல்லி விடுவாராம். இப்படியே சென்று கொண்டிருந்தபோது ஜூபிடர் பிக்சர்ஸ் தங்கள் நிறுவனத்தை சென்னைக்கு மாற்ற முடிவு செய்துள்ளனர்.
சென்னையில் வேறு ஆஃபீஸ் பாய் கிடைப்பான் என்று நினைத்துக் கொண்டு எம் எஸ் விஸ்வநாதனை வேலையிலிருந்து எடுத்து விட்டனர். ஆனால் அதன் பிறகு தான் சுபையா நாயுடு சொல்லியிருக்கிறார் நான் இசையமைத்த பாடல்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது என்று சொன்னீர்கள் அல்லவா அவற்றில் பாதி பாடல்களுக்கு மெட்டு அமைத்தது எம்.எஸ் விஸ்வநாதன் தான்.
ஆரம்பத்திலேயே அவரது பெயரைக் கூறியிருந்தால் நீங்கள் பாடலை ரசித்திருக்க மாட்டீர்கள். எனவே எம்எஸ் விஸ்வநாதனை சென்னைக்கு அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை பாருங்கள் என்று கூறியுள்ளார்.
அதன் பிறகு தான் எம் எஸ் விஸ்வநாதன் மிகப்பெரிய இசையமைப்பாளராக மாறியுள்ளார். இப்படி மூன்று ரூபாய் சம்பளத்தில் ஆபீஸ் பாயாக பயணத்தை தொடங்கிய எம் எஸ் விஸ்வநாதன் தான் இசை கடவுள் என்று போற்றும் அளவிற்கு தனது திறமையால் உயர்ந்தார்.