தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோரின் விவாகரத்து தொடர்பான மனு இணையதளத்தில் கசிந்தது அரசியல் மற்றும் திரைத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு குடும்ப நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் இந்தத் தகவல், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டதாக சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.
இந்தச் செய்தி விஜய்யின் அரசியல் வருகைக்கான ஆயத்தப் பணிகளில் தொண்டர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கில் யாரோ திட்டமிட்டுச் செய்த வேலையா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
இந்த விவகாரத்தில் நீதிமன்ற ஊழியர்கள் யாராவது தகவல்களைக் கசியவிட்டார்களா அல்லது கட்சிக்குள்ளேயே இருக்கும் யாராவது ஒரு ‘கருப்பு ஆடு’ இத்தகைய செயலில் ஈடுபட்டதா என்பது குறித்துத் தீவிரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆர்.டி.ஐ மூலமாக இவ்வளவு ரகசியமான தனிநபர் விபரங்கள் எவ்வாறு பொதுவெளிக்கு வந்தன என்பது சட்ட ரீதியான சந்தேகங்களையும் கிளப்பியுள்ளது.
இந்நிலையில் விஜய்யின் குடும்ப வாழ்க்கை குறித்த இந்த சர்ச்சையானது திட்டமிட்ட அரசியல் சதி என அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்தத் தகவல் கசிவின் பின்னணியில் உள்ள உண்மைத் தன்மையைக் கண்டறிய உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
