தமிழகத்தில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயன்றதாக வெளியான தகவல் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ டாக்டர் இளையராஜாவிடம், ஆட்சிக்கு எதிராக செயல்பட வைப்பதற்காக உயர்பதவியும், சுமார் 35 கோடி ரூபாய் பணமும் தருவதாகக் கூறி சிலர் பேரம் பேசியுள்ளனர். இது தொடர்பாக ஜூன் 29 அன்று எம்.எல்.ஏ இளையராஜா சென்னை காவல் ஆணையரிடம் அளித்த புகாரின் பேரில், திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த குதிரை பேரம் தொடர்பாக முதற்கட்டமாக கைது செய்யப்பட்ட நாகராஜ், தியாகராஜ் மற்றும் நரேஷ் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் ஆகியோரின் பின்னணியோடு இந்த சதித்திட்டம் தீட்டப்பட்டது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து தலைமறைவான செந்தில் பாலாஜி மற்றும் அசோக் ஆகியோருக்கு காவல்துறை சம்மன் அனுப்பிய நிலையில், அவர்கள் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ளனர். இந்த பேரவழக்கில் ஹவாலா முறையில் பணம் கைமாற திட்டமிடப்பட்டிருந்த ஆதாரங்கள் சிக்கியதால், தற்போது மத்திய விசாரணை அமைப்பான அமலாக்கத்துறையும் இந்த விசாரணையை கையில் எடுத்துள்ளது.
வழக்கின் முக்கிய திருப்பமாக, தவெக ஆட்சியை கவிழ்க்க பேரம் பேசிய விவகாரம் தொடர்பாக கரூர் மாநகராட்சிக்குட்பட்ட எல்.ஜி.பி நகரில் வசிக்கும் கனகராஜ் என்பவரின் பைனான்ஸ் நிறுவனத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். திருவல்லிக்கேணி காவல் நிலைய விசாரணை அதிகாரியின் உத்தரவின் பேரில், கரூர் லாலாபேட்டை போலீசார் பாரி நகரில் உள்ள அந்த அலுவலகத்தில் சுமார் ஒரு மணி நேரம் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது குதிரை பேரம் தொடர்பான மிக முக்கிய ஆவணங்கள் மற்றும் ஹவாலா பணப் பரிவர்த்தனைக்கான ஆதாரங்கள் சிக்கியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கனகராஜின் பைனான்ஸ் அலுவலகத்திற்கு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர். மேலும், அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் கொண்ட ஹார்ட் டிஸ்க், முக்கிய கணக்கு புத்தகங்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றுள்ளனர். தற்போது அந்த அலுவலகத்தில் பாதுகாப்புக்காக இரண்டு பெண் காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அமலாக்கத்துறையின் அடுத்தகட்ட சோதனைகளும் கைது நடவடிக்கைகளும் பாயலாம் என எதிர்பார்க்கப்படுவதால், தமிழக அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான பதற்றத்திலும் பரபரப்பிலும் ஆழ்ந்துள்ளது.
