தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மாநிலத்தின் அரசியல் களம் அடியோடு மாறியுள்ளது. பல தசாப்தங்களாகத் தமிழகத்தை ஆட்சி செய்த திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளையும் தோற்கடித்து, தமிழக வெற்றிக் கழகம் புதிய ஆட்சியை அமைத்துள்ளது. இந்த அதிரடி அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து, தவெக அரசின் திட்டங்களும் அமைச்சர்களின் செயல்பாடுகளும் மக்கள் மத்தியில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. இந்தச் சூழ்நிலையில், தவெக தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வரும் ஜூலை 23 ஆம் தேதி வெளியாகவுள்ளது ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த தவெக அரசின் அமைச்சர் விக்னேஷ், மிக முக்கியமான பல கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். குறிப்பாக, கடந்த கால ஆட்சிகளில் உருவாக்கப்பட்ட டாஸ்மாக் துறையின் அவல நிலை குறித்து அவர் கடுமையாக விமர்சித்தார். “சாலைகளின் முன்பாக மதுப்பிரியர்கள் படுத்திருப்பது, பாட்டில்களும் டம்ளர்களும் ஆங்காங்கே சிதறிக் கிடப்பது என டாஸ்மாக் துறையின் தற்போதைய நிலை மிகவும் மோசமாக உள்ளது. இந்த அவல நிலை தொடரக் கூடாது என்பதில் எங்கள் அரசு உறுதியாக இருக்கிறது. துறையை முழுமையாகச் சீரமைப்பதற்கான ஆலோசனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன,” என்று அவர் குறிப்பிட்டார்.
டாஸ்மாக் சீரமைப்பு குறித்து மேலும் பேசிய அவர், “ரெஸ்ட்ரோ பார் கொண்டு வருவது, துறையைத் தனியார்மயமாக்குவது அல்லது அரசே தனியாருக்கு நிகரான உள்கட்டமைப்பை உருவாக்குவது எனப் பலதரப்பட்ட ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், இதில் ரெஸ்ட்ரோ பார் என்ற ஒரு விஷயத்தை மட்டும் யாரோ வெளியில் கசியவிட்டு பரப்பி வருகிறார்கள். எதிர்க்கட்சிகள் நினைப்பது போல, வெறும் வருமானத்தை உயர்த்துவதற்காக மட்டுமே இந்தத் துறையை அரசு வைத்திருக்காது. அப்படி விமர்சித்தால் அவர்கள் ஏமாற்றமே மிஞ்சுவர். முந்தைய ஆட்சிகளைப் போல சொந்தக் கட்சியினருக்கு பார்களை வழங்கி, அதன் மூலம் சம்பாதித்து ‘பார்ட்டி ஃபண்ட்’ வாங்கும் கலாச்சாரம் தவெகவில் ஒருபோதும் நடக்காது; சட்டப்படி மட்டுமே அனைத்தும் நடக்கும்,” என அதிரடியாகத் தெரிவித்தார்.
அரசியல் கடமைகளுக்கு மத்தியிலும் முதலமைச்சர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் குறித்தும் அமைச்சர் சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். “அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். ஆனாலும், படம் பார்க்கும் அந்த 3 மணி நேரம் மட்டும் எங்களது தலைவரின் பழைய ரசிகர்களாகச் செயல்பட அவரிடம் அனுமதி கேட்டுள்ளோம். இதுவரை அனுமதி கிடைக்கவில்லை என்றாலும், நான் அந்தப் படத்தைப் பார்ப்பதற்காக ஏற்கனவே லீவ் போட்டுவிட்டேன். கோவை போத்தனூரில் உள்ள திரையரங்கில் முதல் நாளன்றே ‘ஜனநாயகன்’ படத்தை பார்க்கத் திட்டமிட்டுள்ளேன்,” என்று அவர் கூறினார். அமைச்சரின் இந்த வெளிப்படையான பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது.
