தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சிவகங்கை மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்வதற்காக இன்று (ஏப்.10) சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக அவர் காரைக்குடி நோக்கிப் புறப்பட்டார். விஜய்யைக் காண மதுரை விமான நிலையத்திலிருந்து அவர் சென்ற வாகனம் வரை ஏராளமான தொண்டர்களும் இளைஞர்களும் திரண்டனர். குறிப்பாக, அவரது பரப்புரை வாகனத்தைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து உற்சாகமாகச் சென்றனர்.
இந்நிலையில், மதுரையில் இருந்து அவரைப் பின்தொடர்ந்து சென்றபோது எதிர்பாராத விதமாக ஒரு பைக் விபத்தில் சிக்கியது. அதிவேகமாகச் சென்றுகொண்டிருந்தபோது நிலைதடுமாறி விழுந்ததில், பைக்கில் இருந்த இளைஞர்கள் நடுரோட்டில் தூக்கி வீசப்பட்டுச் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டனர். இந்தத் திடீர் விபத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விஜய்யின் வருகையை முன்னிட்டு உற்சாகத்தில் இருந்த தொண்டர்களிடையே இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
