திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவர் ஒருவர் சக மாணவர்களால் கொடூரமாகத் தாக்கப்படும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறைப் பகுதிக்கு அந்த மாணவரை இழுத்துச் சென்ற கும்பல், அவரது சட்டையைக் கழற்றி முட்டிப்போடச் செய்ததோடு மட்டுமின்றி, தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஒரு வீடியோ பதிவுதான் இந்த விபரீதச் சம்பவத்திற்கு முக்கியக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட அந்தப் பதிவை உடனடியாக இணையத்திலிருந்து நீக்க வேண்டும் என மிரட்டிய அந்த மாணவர்கள், தொடர்ந்து அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். கல்வி கற்கும் இடத்தில் சக மாணவர்களே ரவுடிகளைப் போல நடந்துகொண்ட விதம் காண்போரை பதைபதைக்க வைத்துள்ளது.
பாதுகாப்பாக இருக்க வேண்டிய பள்ளி வளாகத்திலேயே இதுபோன்ற பகிரங்கமான வன்முறை அரங்கேறியிருப்பது பெற்றோர்கள் மத்தியில் கடும் அச்சத்தையும் கவலையையும் உண்டாக்கியுள்ளது. எனவே, இந்த வீடியோ எடுக்கப்பட்ட நாள், தாக்குதலில் ஈடுபட்டவர்களின் விவரம் மற்றும் இதற்கான முழுமையான பின்னணி குறித்து கல்வித்துறை அதிகாரிகளும், மாவட்ட காவல்துறை நிர்வாகமும் தீவிர விசாரணை மேற்கொண்டு, தவறு செய்த மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலுவான கோரிக்கை எழுந்துள்ளது.
