”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க”…. மக்களை நீங்க பாருங்க… பேரவையை அதிரவைத்த CM விஜய் பேச்சு….!

By Nanthini on ஆவணி 19, 2026

Spread the love

சட்டமன்ற உறுப்பினர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து, லஞ்சமற்ற மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய நிர்வாகத்தை வழங்கும் நோக்கில் முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தொகுதிப் பணிகளை எந்தவிதத் தடங்கலுமின்றி சுயமாக மேற்கொள்ள அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் அரசு சார்பில் வாகனங்கள் வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார். பொருளாதார பின்னணி இல்லாத முதல் தலைமுறை சட்டமன்ற உறுப்பினர்களின் நிலையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் போது, காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஜோதிமணி முன்வைத்த கோரிக்கையை ஏற்றே இந்த அறிவிப்பு வெளியானது. பல உறுப்பினர்களிடம் சொந்தமாக வாகனங்களோ அல்லது உதவியாளர்களோ இல்லாததால், அவர்கள் தொகுதி மக்களை நேரில் சந்திக்கவும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவும் சிரமப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டது. நேர்மையான ஆட்சியை உறுதிசெய்ய மக்கள் பிரதிநிதிகளின் குறைந்தபட்சத் தேவைகளை அரசு பூர்த்தி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு இ முடிவு எட்டப்பட்டுள்ளது.

   

இதன்படி, அரசு வழங்கும் கார்களைப் பராமரிக்கவும், எரிபொருள் மற்றும் ஓட்டுநருக்கான செலவுகளுக்காக மாதம் ரூ.75,000 வாகனப்படியாக வழங்கப்படும். மேலும், அலுவலகப் பணிகளைச் சிறப்பாகக் கவனிக்க உதவியாளர் ஒருவரை நியமித்துக் கொள்ள மாதம் ரூ.25,000 உதவிப்படியும் வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்கான உரிய சட்டத் திருத்தங்கள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும், இந்த அறிவிப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் பிறரைச் சாராமல் சுதந்திரமாகச் செயல்பட வழிவகுக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

   

மக்கள் பிரதிநிதிகள் தங்களின் சொந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாத சூழலே, ஊழல் மற்றும் லஞ்சத்திற்குக் காரணியாக அமைகிறது என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. “உங்களை அரசு கவனித்துக் கொள்ளும், நீங்கள் மக்களைக் கவனியுங்கள்; லஞ்சத்தைத் தவிருங்கள்” என்ற முதன்மைச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு, கடைக்கோடி மக்களுக்கும் லஞ்சமற்ற, நேர்மையான நிர்வாகத்தை வழங்கும் உயரிய நோக்கில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.